முதலீட்டாளர்களுக்கு ரூ.16லட்சம் கோடி லாபம்..
இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றம் காரணமாக முதலீட்டாளர்களுக்கு 16லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்தது.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான நேற்று பங்குச்சந்தைகளில் வர்த்தகம் தொடங்கியதும் சாதகமான சூழல் காணப்பட்டது. நாள் முழுவதும் இந்திய பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் நீடித்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம், அமெரிக்க-சீனா இடையேயான வரிக்குறைப்புக்கான ஒப்பந்தங்கள் கையழுத்தானது உள்ளிட்ட காரணங்களால் இந்திய சந்தைகளில் ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 2ஆயிரத்து 975 புள்ளிகள் உயர்ந்து 80ஆயிரத்து 82ஆயிரத்து430 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 917 புள்ளிகள் உயர்ந்து 24ஆயிரத்து 925 புள்ளிகளாகவும் வணிகம் நிறைவுற்றது. இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சாதக சூழலால் முதலீட்டாளர்களுக்கு 16லட்சம் கோடி ரூபாய் லாபம் பதிவு செய்யப்பட்டது. கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் இருந்தது. இன்போசிஸ், அதானி என்டர்பிரைசர்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்தை பதிவு செய்தன. சன் பார்மா, இன்டஸ் இண்ட் வங்கி பங்குகள் மட்டும் சரிவை கண்டன. ரியல் எஸ்டேட், ஆற்றல், தகவல் தொழில்நுட்பத்துறை பங்குகள் 6 விழுக்காடு வரை விலை உயர்ந்தன.ஆட்டோமொபைல், வங்கி, டெலிகாம், ஊடகத்துறை பங்குகளில் கணிசமாக விலை உயர்வு காணப்பட்டது. சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ஒரேநாளில் 2,360 ரூபாய் விலை குறைந்தது. ஒரு சவரன் தங்கம் 70 ஆயிரம் ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் தங்கம் 8 ஆயிரத்து 750 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை ஒரு கிராம் 110 ரூபாயாகவும், கட்டிவெள்ளி விலை கிலோ 1லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாக விற்பனையாகிறது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி, சேதாரத்துடன் சேர்க்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
