வங்கி டெபாசிட் சரிவும் சக்தி காந்ததாஸும்..
இந்தியாவில் சேமிப்புகளின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அதை சரிசெய்யும் நோக்கில் பணிகளை ரிசர்வ் வங்கி செய்து வருகிறது. குறிப்பாக வங்கிகளில் கடன் வளர்ச்சி 13.5 விழுக்காடாக இருக்கிறது. அதே நேரம் டெபாசிட் அளவும் சரிந்து வருகிறது. இந்த பிரச்சனை குறித்து அறிந்ததும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் நேரடியாக தலையிட்டு பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சித்து வருகிறார். அனைத்து பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில தனியார் வங்கிகளின் நிர்வாகிகளை அழைத்துப்பேசியுள்ள சக்தி காந்ததாஸ் கடந்த 3 ஆம் தேதி முக்கிய கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.அதில் பிரதானமாக கடன் மற்றும் டெபாசிட் இடையேயான வளர்ச்சி குறித்து விவாதிக்கப்பட்டது. மூலதன செலவுகள், உள்கட்டமைப்புக்கு செய்யப்படும் செலவுகள்தான் தனியார் முதலீடுகளை அதிகரிக்க வைப்பதாக தெரிகிறது. அப்படி தனியார் நிறுவனங்களில் முதலீடு அதிகரிக்கும்போது கடன் தர தனியார் வங்கிகள் முன்வருகின்றன. இந்த நிலையில் டெபாசிட் சரியும் பிரச்சனை என்பது சந்தையில் கடன் வாங்க வைக்கும் என்றும் கூறப்படுகிறது. டெபாசிட் பிரச்சனை ஒன்றும் ஒரே நாளில் நிகழ்ந்துவிடவில்லை என்றும், இதற்கு 4 முக்கிய காரணிகள் முன்வைக்கப்படுகின்றன. முதலாவதாக கவர்ச்சியற்ற வங்கி டெபாசிட் விகிதம். குறிப்பாக பங்குச்சந்தைகளில் 10-12 விழுக்காடு வரை உள்ள ரிட்டர்ன்ஸ் , பொதுத்துறை வங்கிகளில் 6.8விழுக்காடுதான் தர முடிகிறது. அதிக வங்கிக் கிளைகள் இல்லாததும் டெபாசிட் குறைய காரணமாக முன்வைக்கப்படுகிறது. இதேபோல் அளவுக்கு மீறி கடன் அளித்துவிட்டு தவிப்பதும் டெபாசிட் குறைய மிக முக்கிய காரணியாக தெரிகிறது. வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சனைகள் உள்ளிட்டவையும் தொடர்பு சங்கிலி போல உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒரு காலத்தில் டெபாசிட்கள் அதிகளவில் மூத்த குடிமக்கள் செய்திருந்தனர் ஆனால் அது தற்போது சுருங்கிப்போய்விட்டன. புதிய பென்ஷன் திட்டம் கொண்டுவந்ததும் பெரிய வரவேற்பை பெறவில்லை. பொருளாதார நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு இத்தனை பிரச்சனைகளை சமாளிக்க வேண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.