துறைமுகங்களில் காத்திருக்கும் கப்பல்கள்! முடங்கும் விநியோகம்!
கண்ட்டெயினர் தட்டுப்பாடு ஓரளவு சீரடைந்து வரும் வேளையில் உலக அரங்கில் புதிய சிக்கல் ஒன்று தலையெடுத்து வருவது பொருளாதார நிபுணர்களைக் கவலையடைய வைத்துள்ளது, உலகின் பரபரப்பான துறைமுகங்களில் நுழைவதற்காகக் காத்திருக்கும் கப்பல்களின் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது. பெருந்தொற்றுக் கால நீண்ட முடக்கம் முடிவடைந்து கணினி முதல் கார்கள் வரை நுகர்வோர் தேவை மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருவதால் ஏற்பட்டுள்ள விநியோகச் சங்கிலி பாதிப்பானது இந்தக் காத்திருப்பின் மூலமாக மேலும் சிக்கலை அடையக் கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்.
வெப்ப மண்டலப் புயலான “கொம்பாசு”, சீனாவின் தெற்கு கடற்கரையில் மையம் கொண்டதன் காரணமாக ஷென்ழேன் நகரத்தின் யாண்டியான் துறைமுகம் கண்டெயினர்களை கையாள்வதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது, துறைமுகத்துக்கு வெளியே காத்திருக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தது, பியர்ல் நதிக்கரையின் டெல்டாவை ஒட்டி இருக்கும் சீனாவின் மிக முக்கியமான தொழில்நுட்ப நகரமான ஷென்ழேனின் யாண்டியான் துறைமுகம் உலகின் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றாகும், 2020 ஆம் ஆண்டில் மட்டும் 1,33,40,000 இருபது அடி நீளமுள்ள கன்டெயினர்களை இந்தத் துறைமுகம் கையாண்டிருக்கிறது, ஒரு வாரத்தில் மட்டும் ஏறத்தாழ 100 கப்பல்களை இந்தத் துறைமுகம் கையாள்கிறது.
ஹாங்காங்கில் “லயன்ராக்” புயலானது ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு ஹாங்காங் துறைமுகத்தின் இயல்பு நிலையைப் பாதித்து கண்டெயினர்களை கையாள்வதில் சிக்கலை ஏற்படுத்தியதும், நிலைமை இன்னும் முற்றிலுமாக சீரடையாமல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது, உலகெங்கிலும் கண்டெயினர் முனையங்களில் உருவாகி இருந்த தடைகளுக்கு நடுவில், உலகின் இரண்டு மிக முக்கியமான துறைமுகங்களான யாண்டியானும், ஹாங்காங்கும் இயற்கை சீற்றத்தால் பாதிப்படைந்திருப்பது உலகளாவிய விநியோக சங்கிலியை கடுமையாகப் பாதிக்கக்கூடும்.
பெருந்தொற்று காரணமாக நிங்போ-ஜௌஷான் துறைமுகம் ஆகஸ்ட் மாதம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டது. அதேபோல உலகின் மிகப்பெரிய ஷாங்காய் கொள்கலன் துறைமுகம், கடந்த மாதம் புயல் காரணமாக தனது சில இயக்கங்களை நிறுத்திக் கொண்டது, தேவைகளுக்கு எதிரான தட்டுப்பாடுகள் உலகளாவிய அளவில் அதிகரித்து வரும் சூழலில் வானிலையும் சேர்ந்து விநியோக சங்கிலியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.