சார் கார்ட் மேலே உள்ள 16 டிஜிட் நம்பர் சொல்லுங்க ….!!!
16 டிஜிட்டை கேட்டு வரும் இந்த குரலை தமிழ்நாட்டில் கேட்காதவர்களே இல்லை என்ற நிலை உள்ளது. இதற்கே இப்படியா என்றால்,இதனை மிஞ்சும் வகையில் தற்போது இந்தியா முழுவதும் மற்றும் ஒரு மோசடி கும்பல் தீவிரமாக களமிறங்கியுள்ளது.
உங்கள் செல்போன் எண்ணை 5ஜிக்கு மாற்றித்தருகிறோம் என பேசும் கும்பல் பணத்தை மொத்தமாக ஆட்டைய போடுவதில் குறியாக உள்ளது. இந்தியாவில் மட்டும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 2021 தரவுகளின்படி 49 கோடியே 21 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் 5ஜி சேவையை மையப்படுத்தி நடைபெறும் மோசடிகள் கணிசமாக உயர்ந்திருக்கிறது என எச்சரிக்கிறார் சார்க் அமைப்பின் இந்திய தலைவர் சுந்தர் பாலசுப்பிரமணியன் 5ஜி சேவைக்கு மாற்றுகிறோம், உங்கள் போனுக்கு வரும் ஓடிபி எண்ணை சொல்லுங்கள் என கேட்கும் கும்பல், அக்கவுண்டில் உள்ள மொத்த பணத்தையும் சுருட்டிக்கொண்டு கம்பி நீட்டி விடுகிறது. ஒரே ஒரு கிளிக்கில் பணத்தை இழப்பதை தடுக்கும் வகையில் செபி,ரிசர்வ் வங்கி,டிராய் ஆகிய அமைப்புகள் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். விரைவில் இது அமலுக்கு வர இருக்கிறது. மோசடிகளை கண்டு ஏமாறாதீர்கள் என்று முன்னணி செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தாலும், அதனை அலட்சியம் செய்யும் வாடிக்கையாளர்கள் ஏடாகூடமான லிங்குகளை கிளிக் செய்துவிட்டு, பணம் போச்சே என புலம்பும் போக்கும் அதிகரித்துள்ளது.