டிவிட்டர் மீது இத்தனை கேசா…
வடிவேலு வாடகை சைக்கிள் எடுத்துக்கொண்டு வாடகையும் தராமல்,சைக்கிளும் விடாமல் ஊர் முழுக்க சுத்தும் அதே பாணியில், பெரிய நிறுவனமான டிவிட்டரும் செய்து வருகிறது என்றால் அது மிகையல்ல..பெரிய தொகை கொடுத்து டிவிட்டரை எலான் மஸ்க் வாங்கியிருந்தாலும் எங்கு பார்த்தாலும் கடன், பாக்கி என்று பணக்கார கடன்காரராகவே மஸ்க் திகழ்கிறார். கட்டட உரிமையாளர்கள், ஆலோசகர்கள்,வெண்டார்ஸ் என 9 பேருக்கு 14 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நிலுவைத்தொகையை டிவிட்டர் நிறுவனம் செலுத்தவேண்டியுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் அவர்கள் டிவிட்டருக்கு எதிராக வழக்கும் தொடர்ந்துள்ளனர். டிவிட்டர் மார்கெட்டிங் குழுவுக்கு கிஃப்டுகள் வாங்கியதற்கு பாக்கியாக 7000 டாலர் செலுத்த வேண்டியுள்ளதாக ஒரு நிறுவனம் தெரிவித்துள்ளது. சரிவில் இருக்கும் நிறுவனங்களுக்கு உதவும் நிறுவனமான வான்கான்வாய் டிவிட்டர் பற்றி கணித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் டிவிட்டர் நிறுவனம் திவாலாக கணக்குகாட்ட இந்த நடவடிக்கைகள் செய்திருப்பதாக கூறுகிறது. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரியில் மட்டும் இடங்களுக்கு வாடகையாக டிவிட்டர் நிறுவனம் 6.8மில்லியன் டாலர் தரவேண்டியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் உள்ள டிவிட்டர் நிறுவன அலுவலகத்துக்கு வாடகை தரமுடியாததால் அலுவலகத்தை பூட்டி ஊழியர்கள் வெளியேற்றினர். மஸ்க்குக்காக போராடி டிவிட்டரை வாங்கித்தந்த வக்கீலின் நிறுவனத்துக்கு 1.9மில்லியன் நிலுவைத் தொகை உள்ளதாகவும் வழக்கு பதியப்பட்டது. நியூஜெர்சியில் இருந்து சான்பிரான்சிஸ்கோவுக்கு ஏராளமானோர் பறந்து வந்ததாகவும், அதற்கான பணம் கூட இதுவரை தரப்படவில்லை என்று மொத்தம் 9 வழக்குகள் அமெரிக்க நீதிமன்றத்தில் மஸ்க் நிறுவனத்துக்கு எதிராக நடைபெற்று வருகிறது.