கொஞ்சநாள் முன்னாடி அமெரிக்கா..இப்ப ஸ்விட்சர்லாந்தா..
கடந்த சில நாட்களாக உலக பங்குச்சந்தைகளை கவனிப்பவர்களுக்கு இந்த பெயர் கண்டிப்பாக நன்கு தெரிந்திருக்கும். அந்த நிறுவனத்தின் பெயர் credit suisse.கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் இரண்டு பெரிய வங்கிகளான சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கிகள் திவாலானதால் அவற்றின் பங்குகள் உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த credit suisse நிறுவன பங்குகள் கடந்த புதன்கிழமையில் இருந்து கிடுகிடுவென சரிந்தன. மிகக்குறுகிய காலகட்டத்தில் கிட்டத்தட்ட 24 விழுக்காடு பங்குகள் சரிந்து விழுந்து அந்நிறுவனத்துக்கு பேராபத்து ஏற்பட்டது. இதனையடுத்து 2 நாட்கள் சந்தையை சமாளித்த அந்நிறுவனம், வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற அடுத்தகட்ட நடவடிக்கையை கையில் எடுத்தது. அதாவது தங்கள் நிறுவனத்துக்கு நிதி அளித்து உதவவேண்டும் என்று credit suisse நிறுவனம் ஸ்விட்சர்லாந்து தேசிய வங்கியிடம் கோரிக்கை விடுத்தது. இதனை ஏற்ற ஸ்விட்சர்லாந்து தேசிய வங்கி போதுமான நிதியை அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. கையில் வைத்திருக்கும் சொத்துகளை வைத்து கடன் தர ஸ்விட்சர்லாந்து தேசிய வங்கி இசைவு தெரிவித்துள்ளது. அதாவது சரிவில் கிடந்த நிறுவனத்துக்கு அந்நாட்டு தேசிய வங்கி 54 பில்லியன் நிதி தர சம்மதம் தெரிவித்துள்ளதால் CS நிறுவன பங்குகளின் மதிப்பு கிடுகிடுவென உயரத் தொடங்கியுள்ளது. பெரிய சரிவு வந்தபோது வெட்கத்தை விட்டு தனக்கு உதவி வேண்டும் என்று கேட்டதால் credit Suisse நிறுவனம் பாதிப்பில் இருந்து தப்பியதாக கூறப்படுகிறது.