ராக்கெட் வேகத்தில் விலை உயர்ந்த ஸ்பைஸ்ஜெட் பங்குகள்…
இந்திய பங்குச்சந்தைகளில் ஸ்பைஸ்ஜெட் நிறுவன பங்குகள் 15 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்நிறுவன பங்குகள் ஒரே நாளில் 20%உயர்ந்திருக்கிறது. இதற்கு பின்னால் காரணம் இருக்கிறது. நிதி திரட்ட அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக வெளியான தகவலே இந்த விலையேற்றத்துக்கு காரணமாக கூறப்படுகிறது. டிசம்பர் 11ஆம் தேதி இந்நிறுவனத்தின் இயக்குநர்கள் மட்டத்திலான கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு மூலதனங்களை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈக்விட்டி பங்குகள் வழியாக நிதியை திரட்டவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாம். அந்நிறுவனத்தின் பங்குகள் மொத்தம் 3 கோடி பங்குகள் உள்ளன. ஒரு பங்கின் விலை டிசம்பர் 7ஆம் தேதி 52 ரூபாய் 29 காசுகளாக இருக்கிறது. இது கடந்த 6 மாதங்களில் தினசரி சராசரியைவிட அதிகமாகும். கடந்த 15 மாதங்களில் முதன் முறையாக 52 ரூபாய் 29 காசுகளை இந்த பங்கு எட்டியுள்ளது. கடனில் சிக்கியுள்ள இந்த நிறுவனம், செப்டம்பர் மாத காலாண்டு தரவுகளை வெளியிடவும் வரும் கூட்டத்தில் இசைவு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான சேவைகளை பகுதியளவில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு எதிராக 3 நிறுவனங்கள் தேசிய சட்ட தீர்ப்பாயத்தில் புகார்களை அளித்துள்ளன. நிலைமை இப்படி இருக்கையில் கடந்த ஜூலையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 500கோடி ரூபாய் நிதியை ஈக்விட்டி பங்குகள் மூலம் திரட்டி இருந்தார். கடனில் சிக்கியுள்ள ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தை வாங்க இன்டர் கிளோப் ஏவியேஷன் நிறுவனம் திட்டமிட்டு உள்ளதாக அண்மையில் தகவலும் கசிந்தது. ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் வருவாய் 2ஆயிரத்து 4 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த தொகையானது, ஜூனுக்கு முந்தைய காலாண்டில் 2 415 கோடி ரூபாயாக இருந்தது. கடுமையான காலகட்டத்திலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 35விழுக்காடு அளவுக்கு விலை உயர்ந்திருக்கிறது.