கேஸ் விலையை குறைக்க நடவடிக்கை…
ஒரு நடுத்தர குடும்பத்தின் மாத பட்ஜெட்டில் சமையல் கேஸ் சிலிண்டருக்கு எப்போதுமே ஒரு பெரும்பங்கு உண்டு. அண்மையில் கேஸ் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. இதனால் நடுத்தர மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்த சூழலில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை குறைக்க போதுமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என்றார். தற்போது வரை ஒரு சிலிண்டருக்கு மத்திய அரசு 200 ரூபாய் மானியம் அளித்து வருவதாக புரி கூறினார்.கொரோனா காலகட்டத்தில் 3 இலவச சிலிண்டர்கள் அளிக்கப்பட்டதால் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் ஆயில் பாண்ட் வாங்கியதால் கடன் ஏற்பட்டதாகவும் அதனால் இதுவரை வட்டி கட்டியதாகவும் அவர் சாடினார். கேஸ் மானியமாக மட்டும் ஆண்டுக்கு 9 முதல் 10 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு செலவாகிறது என்றும் புரி கூறினார். காங்கிரஸ் ஆட்சி செய்தபோது சிலிண்டர் விலை 400 முதல் 500 ரூபாய் என்ற அளவில்தான் இருந்தது. ஆனால் தற்போது வீட்டுக்கு டெலிவரி செய்ய வரும் முகவருக்கு தரும் பணத்துடன் சேர்த்தால் 1,200 ரூபாய் வரை ஒரு சிலிண்டருக்கு செலவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.