பெட்ரோல், டீசல் மீதான சுங்க வரியைக் குறைக்கும் எண்ணம் இல்லை: நிர்மலா சீதாராமன்
பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் மீதான சுங்க வரியைக் குறைக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். “எண்ணெய்ப் பத்திரங்கள் காரணமாக ஏற்பட்ட சுமையால் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முடியவில்லை. மத்திய, மாநில அரசு விவாதித்து வழியை உருவாக்கும் வரை அதற்கு தீர்வு இல்லை” என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
முந்தைய காங்கிரஸ் அரசு, ₹1.44 லட்சம் கோடிக்கு எண்ணெய் பத்திரங்களை வெளியிட்டு எரிபொருள் விலையைக் குறைத்தது. காங்கிரஸ் அரசு செய்த இந்த வேலையால் எங்களால் ஏதும் செய்ய முடியவில்லை. அதனால் தான் பெட்ரோல், டீசலின் விலையை எங்களால் குறைக்க முடியவில்லை என்று குற்றம் சாடினார்.
காங்கிரஸ் அரசு வெளியிட்ட எண்ணெய் பத்திரங்களுக்கு வட்டி செலுத்துவதால், நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த 5 ஆண்டுகளில் ₹70,195 கோடிக்கும் மேல் மத்திய அரசு வட்டி கட்டி உள்ளது எனவும் மேலும் கூறினார். 2020க்குள் இன்னும் ₹37,000 கோடி அளவுக்கு வட்டி செலுத்த வேண்டும் என்று சீதாராமன் கூறினார்.
முன் தேதியிட்ட வரிச் சட்டத்தை நீக்கி, புதிய சட்டம் இயற்றப்பட்டதை அடுத்து, அதற்கான விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறியவர்,நடப்பு நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கிற்குள் நாட்டின் பணவீக்கம் இருக்கும் என்றும் கூறினார். சில மாதங்களாக ஜி.எஸ்.டி., நேரடி வரி வருவாய் அதிகரித்துள்ளது. பண்டிகை காலம் என்பதால் தேவைகளும், கடன் வளர்ச்சியும், வரி வருவாயும் அதிகரிக்கும் எனவும் கூறினார்.
தமிழ்நாடு அரசு அதன் பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, பெட்ரோலின் மீதான வரியில் ₹3 குறைக்கப்படும் என்று கூறியது. கூறியவாறே, அன்றிலிருந்து பெட்ரோல் விலை தமிழ்நாட்டில் குறைந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.