52 வார உச்சம் தொட்ட பங்குகள்….
இந்தியாவில் சாலையில் செல்லும் 10இல் 5 அல்லது 6 கார்கள் நிச்சயம் டாடாவின் தயாரிப்பாகத்தான் இருக்கும் என்பதே நிதர்சனம். இந்த நிலையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஜூலை 3ஆம் தேதி 52 வாரங்களில் இல்லாத உச்சம் தொட்டது. 602 ரூபாய் 30 காசுகளாக டாடா மோட்டார்ஸ் பங்குகள் உச்சம் பெற்றன. பழைய விலையை விட 1 விழுக்காடு விலை அதிகமாகும். நோமுரா என்ற அமைப்பு ஜூன் மாதத்தில் டாடா குழுமத்தின் கார்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் விற்பனை குறித்து ஒரு கணிப்பை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் கணிக்கப்பட்ட அளவை விட எளிதாக அதிகளவில் விற்பனையை செய்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அசத்தியுள்ளது. இதன் விளைவாகவே பங்குச்சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் காணப்பட்டது. அதாவது 78 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே ஜூன் மாதத்தில் விற்கப்படும் என்று கணிக்கப்பட்ட நிலையில்,அதைவிட அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்கப்பட்டன. வணிக ரீதியிலான வாகனங்கள் 34,314 விற்கப்பட்டன. ஆனால் கடந்தாண்டு 37,265 வாகனங்கள் விற்கப்பட்டிருந்தன. இதேநேரம் தனிநபர் வாகனங்கள்விற்பனை 5 விழுக்காடு உயர்ந்திருக்கிறது.மொத்தமாக ஜூன் மாதத்தில் மட்டும் 80 ஆயிரத்தை கடந்தது டாடா மோட்டார்ஸ் வாகன விற்பனை. தனிநபர்கள் தங்களுக்கான கார்களை வாங்கும் எண்ணிக்கை என்பது ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் 8 விழுக்காடு உயர்ந்தும், வணிக பயன்பாட்டு வாகனங்கள் 15 % சரிவையும் சந்தித்துள்ளன. Altroz iCNG, ரக வாகனங்களை அண்மையில் டாடா குழுமம் அறிமுகப்படுத்தியது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இது மட்டுமின்றி மின்சார வாகனங்களுக்கும் வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் பண்டிகைகள் வருவதால் அதிக லாபத்தை நிறுவனம் ஈட்ட இயலும் என்றும் டாடா குழுமம் கருதுகிறது. ஜாக்குவார் லேண்ட் ரோவர் ரக கார்களுக்கான பொது வெளியீட்டுக்கு தயாராக உள்ள நிலையில் அடுத்தடுத்த வர்த்தக நாட்களில் உச்சம் தொட்டிருப்பது இந்த துறையில் முதலீடு செய்தவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.