கடினமான சூழலிலும் பிரகாசித்த பங்குகள்..
வாரத்தின் கடைசி வர்த்தக நாளில் இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் முடிந்தன. கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில், பங்குச்சந்தைகளில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. விலைவாசி உயர்வு, வரும் நாட்களில் உணவுப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளை சக்தி காந்ததாஸ் சுட்டிக்காட்டி பேசினார். இதனால் சந்தையில் ஊசலாட்டம் காணப்பட்டது. அமெரிக்க பங்குச்சந்தைளள் மற்றும் அந்நாட்டு பெடரல் ரிசர்வ் தரவுகள் அடுத்த வாரம் வெளியாக இருக்கும் சூழலில் , அதுவும் இந்திய சந்தைகளில் கலவையான தாக்கத்தை ஏற்படுத்தியது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 304 புள்ளிகள் உயர்ந்து 69 ஆயிரத்து 825 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது.
இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 68 புள்ளிகள் உயர்ந்து 20,969 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவுற்றது. முன்பு வர்த்தகம் நடந்து கொண்டிருக்கையில் முதன் முறையாக நிஃப்டி புதிய உச்சமாக 21 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. 70 ஆயிரம் புள்ளிகளுக்கு வெகு சில புள்ளிகள் மட்டுமே தேவைப்படும் நிலையில், முதலீட்டாளர்கள் அதீத ஆர்வமடைந்திருக்கின்றனர்.
அமெரிக்க வேலைவாய்ப்புகள் குறித்த தரவுகள் வெளியாக இருக்கும் சூழலில் உலகின் பல நாடுகளின் சந்தைகளும் ஏற்றத்திலேயே வர்த்தகத்தை நிறைவு செய்தன.