Supertech நிறுவனம் திவால்.. பணம் செலுத்திய 25,000 பேர் பாதிப்பு..!?
நொய்டாவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான Supertech திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடு வாங்குவதற்காக அந்நிறுவனத்தில் பணம் செலுத்தியிருந்த 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Supertech நிறுவனம் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புள், அலுவலக கட்டிடங்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இது பொதுத்துறை வங்கியான Union Bank Of India-விடம் வாங்கிய கடனை திருப்பி தராமல் இருப்பதாக கூறப்படுகிறது. கடும் நிதி நெருக்கடி காரணமாக இந்நிறுவனத்தில் பல்வேறு கட்டுமான பணிகளும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
இதையடுத்து கடனை திருப்பி செலுத்தாக சூப்பர்டெக் நிறுவனத்தை திவலானதாக அறிவிக்கும்படி, NCLT-யிடம் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா அளித்த நோட்டீஸ் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அதன்படி, சூப்பர்டெக் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கிரேட்டர் நொய்டா – நொய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் சூப்பர்டெக் கட்டியிருந்த இரண்டு மிகப்பெரிய கட்டிடங்களை இடிக்கும்படி உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருப்பது அந்நிறுவனத்துக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
ஆனால், திவால் அறிவிப்பை எதிர்த்து தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் போராடுவோம் என்றும், திவால் நோட்டீஸ் காரணமாக தாங்கள் தற்போது செயல்படுத்தி வரும் எந்த கட்டுமானங்களும் பாதிக்கப்படாது எனவும் Supertech நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 7 ஆண்டுகளில் 40 ஆயிரம் பேருக்கு குடியிருப்புகளை கட்டி கொடுத்துள்ளோம். இந்த ஆண்டு இறுதிக்குள் 7 ஆயிரம் வீடுகளை கட்டி தர இலக்கு நிர்ணயித்துள்ளோம். அதனை நிச்சயம் நிறைவேற்றுவோம் எனவும் சூப்பர்டெக் நிறுவனம் உறுதியளித்துள்ளது.