இந்தியாவுடனான ஏற்றுமதி, இறக்குமதி உறவை முறித்துக்கொண்ட தலிபான்!
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியதால், தலிபான் தீவிரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் போர் நிலவியது. தலிபான், ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல் உட்பட முக்கிய பகுதிகளை கைப்பற்றியது.
ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தலிபான்கள் ஆட்சியை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில், அவர்கள் இந்தியாவுடனான ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக உறவை முறித்துக்கொண்டுள்ளனர்.
“தலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் நிகழ்வுகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம். பாக்கிஸ்தான் வர்த்தகப் பாதை வழியாக இந்தியாவிற்குள் பொருட்கள் நுழைவதற்குத் தலிபான்கள் தடை விதித்துள்ளனர். ஆப்கானிஸ்தானுடன் இந்தியா நீண்ட வர்த்தக உறவைக் கொண்டுள்ளது. மருந்துகள், ஆடை, தேநீர், காபி மற்றும் மசாலாப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அங்கிருந்து விதை மற்றும் பருப்பு வகைகள், வெங்காயம், பிசின் வகைள் போன்றவை இறக்குமதி ஆகின்றன” என்று இந்திய ஏற்றுமதி கழக கூட்டமைப்பின் இயக்குநர் அஜய் சஹாய் கூறினார். இந்த இடர்பாடுகளால் பாதாம் போன்ற பருப்பு வகைகள் மற்றும் உலர் பழங்களின் விலைகள் ஏறலாம் என்றும் தெரியவருகிறது.