தயாராகிறது தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் 1000 கோடி மதிப்பிலான புதிய IPO!
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB), 100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை கொண்ட தென்னிந்தியாவின் பழமையான வங்கிகளில் ஒன்றாகும். 1921-ல் ஒரு சமூக வங்கியாக தூத்துக்குடியில் துவங்கப்பட்ட இந்த வங்கி, 1962ல் பெயர் மாற்றத்திற்கு பிறகு பறந்து விரிந்து இன்று இந்தியா முழுவதும் 500க்கும் மேலான இடங்களில் தடம் பதித்து வளர்ந்து வருகிறது. பிரதானமாக தமிழ்நாட்டில் செயல்படும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, தமிழ்நாட்டை தவிர பிற 15 மாநிலங்களிலும், 6 யூனியன் பிரதேசங்களிலும் வலுவாக செயல்பட்டுவருகிறது.
இந்த வங்கி கடந்த செப். 6 அன்று செபியிடம் தனது IPO வெளியீட்டிற்காக வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்ட்டஸை (DRHP) சமர்ப்பித்துள்ளது. இந்த வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்ட்டஸ் படி, ₹10 முகமதிப்பு கொண்ட 15,827,495 பங்குகளையும், தனது பங்குதாரர்களின் ஒரு பகுதி பங்கான 12,505 பங்குகளையும் சேர்த்து 15,840,000 பங்குகள் வரை IPO மூலம் வெளியிட உள்ளது.
IPO மூலம் ₹1,000 கோடியை திரட்ட நினைக்கும் வங்கி அந்த பணத்தை கொண்டு அதன் மூலதனத்தை வலுவாக்க எண்ணுகிறது. ஆக்ஸிஸ் கேப்பிடல், மோதிலால் ஓஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைஸர்ஸ் மற்றும் எஸ்பிஐ கேப்பிடல் மார்கெட்ஸ் IPO வை நிர்வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 2020 வரை முடிந்த நிதியாண்டில் வங்கி ₹407.69 கோடி லாபம் ஈட்டியிருந்தது. மார்ச் 2021 வரை முடிந்த நிதியாண்டில் லாபமானது ₹603.3 கோடியாக வளர்ந்து, 48 சதவீத உயர்வை எட்டியுள்ளது. வட்டியிலிருந்து பெற்ற வருமானம் 2020-ஆம் நிதியாண்டில் ₹1,319.51 கோடியாக இருந்தது, இதுவே 2021-ஆம் நிதியாண்டில் ₹1,537.5 கோடியாக வளர்ந்து 16.52 சதவீத உயர்வை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.