வேளாண் தொழில் தொடங்க ரூ.1 லட்சம் கடனுதவி – வேளாண்துறை அமைச்சர் அறிவிப்பு..!!
வேளாண் சார்ந்த தொழில் தொடங்க முதற்கட்டமாக 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் கடனுதவி வழங்கப்படும் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப் பேரவையில் 2-வது முறையாக வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அவர், உழவு தொழிலின் உன்னதத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் 2-வது முறையாக வேளாண் துறைக்கென தனியாக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கடந்த நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 86 அறிவிப்புகளில், 80 அறிவிப்புகளுக்கு அரசாணைகள் வெளியீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
விவசாயிகளுக்கு இடுபொருள் மானியமாக ரூ.154 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும், கரும்பு சாகுபடிக்கு ரூ.10 கோடி ஒருக்கப்படுவதாகவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.
விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காண சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு விலையில்லா தென்னங்கன்றுகள் வழங்க ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்தும், மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் வேளாண்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.