சிறுதானிய திருவிழா நடத்தப்படும்.. – இயற்கை வேளாண்மைக்கு ரூ.400 கோடி ஒதுக்கீடு.!!
2023-ம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சிறுதானிய திருவிழா தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் பன்னீர் செல்வம், 19 மாவட்டங்களில் சிறுதானிய சிறப்பு மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும், இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
நெல்லுக்கு பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட மாற்று பயிர்களை சாகுபடி செய்ய 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும் என்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20,000 விவசாயிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்,
சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க ரூ.28.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும், தூத்துக்குடி, விருதுநகர் தென்காசி, கரூர், அரியலூர் மாவட்டங்களில் கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு உள்ளிட்டவற்றை பயிரிடுவதை ஊக்குவிக்கும் வகையில், ரூ.28.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
செம்மரம், சந்தனம் உள்ளிட்ட விலை மதிப்புமிக்க மர வகைகளின் கன்றுகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும்.
விதை முதல் விளைச்சல் வரை தொழில்நுட்பங்களை மின்னனு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விளை நிலங்களில் ட்ரோன் மூலம் பூச்சிமருந்துகள் தெளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்,
விவசாயம் தொடர்பான திட்டங்களில் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க படிப்படியாக கணினி வழியே பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.