அறிவுசார் நகரம் உருவாக்கப்படும்.. – இளைஞர் மேம்பாட்டுக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு..!!
தமிழகத்தில் அறிவு சார் நகரம் உருவாக்கப்படும் என்றும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ.293 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்கள் திறன் வளர்ச்சிக்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு, தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும், பல்லுயிரின பாதுகாப்புக்காக வள்ளலார் பல்லுயிர் காப்பகத்திற்கு ரூ .20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகரில் புதிய விளையாட்டு வளாகம் ரூ.10 கோடியில் அமைக்கப்படும், தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்கம் தேடல் திட்டத்திற்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு என்ற அறிவிப்புகளும் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச்சாலையாக அகலப்படுத்த ரூ. 135 கோடி நிதி ஒதுக்கீடு என்று தெரிவித்துள்ள அமைச்சர், இலவச பயண திட்டத்தால் பேருந்தில் பயணிக்கும் மகளிர் எண்ணிக்கை 60 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், பேருந்துகள் நவீன மயமாக்கல், மின் பேருந்துகள் கொள்முதல் செய்ய ரூ. 5375 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புக்காக ரூ.450 கோடி செய்யப்பட உள்ளதாகவும், ஆய்வுகளின்படி, மன அழுத்தம் மற்றும் மனச்சிதைவு ஆகியவற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையை, தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் என்ற உயர் நிலை அமைப்பாக மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை 750 படுக்கை வசதிகளுடைய தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர் தர மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படும்; ₹100 கோடி மதிப்பீட்டில் உலக வங்கி உதவியுடன் செயல்படுத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.