இந்தியாவின் முதல் கடலில் மிதக்கும் காற்றாலைப் பூங்காவை அமைக்கும் தமிழ்நாடு !
பசுமை எரிசக்தி எனப்படும் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் சூரிய ஒளி சக்தித் திட்டங்களில் தமிழகம் தடம் பாதிக்க விரும்பும் நிலையில், மன்னார் வளைகுடாவில் டென்மார்க் நாட்டின் நிதியுதவியுடன் $ 5-10 பில்லியன் அளவில் புதுப்பிக்கத்தக்க துறை முதலீட்டில் ஈடுபட வாய்ப்புள்ளது. இலங்கையின் மேற்குக் கடற்கரைக்கும், இந்தியாவின் தென்கிழக்கு முனைக்கும் இடையில் மன்னார் வளைகுடாவில் அமைந்திருக்கும் தீவொன்றில் இந்த பசுமை எரிசக்தித் திட்டம் துவங்கப்படவிருக்கிறது. இதன்மூலம் 4 முதல் 10 ஜிகாவாட் மின்னுற்பத்திக்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.
டென்மார்க்கின் எரிசக்தித் துறை அமைச்சர் டான் ஜோர்கென்ஸன் தலைமையிலான நிபுணர் குழு புதன்கிழமையன்று இத்திட்டம் தொடர்பாக விவாதிக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்தது, இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வருமானால் இந்தியாவின் முதல் கடலில் மிதக்கும் காற்றாலைப் பூங்காவாக இது இருக்கும்.
அடுத்த 10 ஆண்டுகளில் 20,000 மெகாவாட் சூரிய சக்தித் திட்டங்கள், போதுமான மின்கல சேமிப்பு, 3,000 மெகாவாட் நீர்மின் திட்டங்கள் மற்றும் 2,000 மெகாவாட் எரிவாயு அடிப்படையிலான மின் யூனிட்டுகளைக் கொண்டு வரும் திட்டங்களை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO) அறிவித்த சில நாட்களுக்குப் பிறகு இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்த திட்டங்களுக்கு சுமார் ரூ.1.32 டிரில்லியன் கடன் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .டென்மார்க் பிரதிநிதிகள் குழுவில் இந்தியாவுக்கான அந்நாட்டுத் தூதர் ஃப்ரெடி ஸ்வானே மற்றும் எரிசக்தித் துறையின் தலைவர் அசர் ராஸ்முசென் பெர்லின்க், 18 டேனிஷ் நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சக அதிகாரிகளும் தொழில்துறை அதிகாரிகளும் அடங்குவர்.
கடந்த மார்ச் மாதம், ஸ்வனே சென்னை வந்து தமிழக தொழில்துறை முதன்மைச் செயலாளர் என்.முருகானந்தம் மற்றும் பிற அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். “சென்னையில் கடல் கடந்த காற்றாலை எரிசக்திக்கான சிறந்த மையத்தை உருவாக்குவது, மன்னார் வளைகுடாவில் கடல் கடந்த காற்றாலைப் பண்ணை மற்றும் தமிழக அரசின் காலநிலை மாற்றத்திற்கான உடனடி செயல் திட்டம் ஆகியவற்றை வடிவமைப்பது ஆகியவை விவாத அம்சங்களில் குறிப்பிடத்தக்கவை” என்று தமிழக அரசு அதிகாரி ஒருவர் கூறினார். தமிழ்நாட்டில் செயல்படும் சில முக்கியமான டென்மார்க் நிறுவனங்களில் வெஸ்ட்டாஸ், கியூபிக், மேர்ஸ்க், கிரண்ட்ஃபோஸ், எப்.எல்ஸ்மிட்த் மற்றும் டான்ஃபோஸ் ஆகியவை குறிப்பிடத்தகுந்தவை.
ஜனவரி 2003 முதல் ஜனவரி 2021 வரை தமிழ்நாட்டில் டென்மார்க் நாட்டின் முதலீட்டு மதிப்பு $ 751.72 மில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகம் தவிர இந்தியாவின் பிற பகுதிகளில் நோவோ-நோர்டிஸ்க், ஏ.பி.மொல்லர் மேர்ஸ்க் மற்றும் ரெம்போல் செயல்படுகிறது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் டென்மார்க் இந்தியாவில் $ 1 பில்லியனுக்கு மேல் முதலீடு செய்துள்ளது. டென்மார்க்கை மையமாகக் கொண்ட சுமார் 200 டென்மார்க் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்படுகின்றன. டென்மார்க்கில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்போசிஸ் டெக்னாலஜிஸ், ஐடிசி இன்போடெக் மற்றும் எல் அண்ட் டி இன்ஃபோடெக் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனுக்கு விஜயம் செய்தபோது, பசுமை செயல்திட்டக் கூட்டாண்மை மற்றும் சுகாதாரம் குறித்த விவாதங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த 20 ஆண்டுகளில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஒருவர் டென்மார்க்கிற்கு விஜயம் செய்தது இதுவே முதல் முறையாகும். கிரண்ட்போஸ், வெஸ்டாஸ், மேர்ஸ்க், ஹால்டர், டாப்சோ மற்றும் சிஐபி ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளை ஜெய்சங்கர் சந்தித்திருந்தார். பிரிட்டிஷ் அரசு சமீபத்தில் பொது மற்றும் தனியார் பங்கேற்பின் மூலம் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் சுமார் $ 1.2 பில்லியன் முதலீடு செய்வதாக அறிவித்தது. 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 450 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை இந்தியா வரிசைப்படுத்தியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி குழுமம் போன்ற பல தொழில் துறை பெருநிறுவனங்கள் இதில் தங்கள் பங்கெடுப்பை உறுதி செய்துள்ளனர்.