பிரிட்டனில் பேட்டரி ஆலை அமைக்கும் டாடா குழுமம்
இந்தியாவில் பெரிய தொழில் நிறுவனமாக டாடா குழுமம் உள்ளது. இந்த நிறுவனம் பிரிட்டனில் வாகனங்களுக்கான பேட்டரி தயாரிக்கும் பிரமாண்ட ஜிகா பேக்டரியை நிறுவ இருப்பதாக அறிவித்துள்ளது.இந்த பேக்டரி இந்தியாவை விட்டு வெளியே டாடா குழுமம் அமைக்கும் மிகப்பெரிய தொழிற்சாலையாகும். ஜாக்குவார் அண்ட் லாண்ட் ரோவர் நிறுவனத்தில் இந்த முதலீடுகள் செய்யப்பட இருக்கின்றன. இது பிரிட்டன் மற்றும் ஐரோப்பியாவில் உள்ள தங்கள் வணிகத்தை செழுமைப்படுத்த உதவும் என்றும் டாடா குழுமம் கூறியுள்ளது. இதுதொடர்பாக டாடா சன்ஸ் குழுமத் தலைவர் சந்திரசேகரன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரிட்டனில் 40ஜிகாவாட் அளவுக்கு பேட்டரி தயாரிப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே பிரிட்டனில் தொழில்நுட்ப நிறுவனங்கள், ரசாயண ஆலைகள் ஸ்டீல் மற்றும் வாகன உற்பத்திஉள்ள நிலையில் இந்த தொழில் முதலீடு செய்துள்ளதாக சந்திர சேகரன் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் அனைத்து வாகனங்களும் பேட்டரியில் இயங்கும் திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் பிரிட்டனில் ஆலையை டாடா குழுமம் அமைக்க இருப்பதாக பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவில் மிகப்பெரிய முதலீடாக இது மாறியுள்ளதாக டாடா குழுமம் அறிவித்துள்ளது. 4,000 பேருக்கு வேலைவாய்ப்பு, விநியோகத்துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் டாடா குழுமம் தெரிவித்துள்ளது. இந்த திட்டம் குறித்து பேசியுள்ள பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்,கார் உற்பத்தி ஆலையை வலுவாக்க இந்த முதலீடு உதவும் என்று தெரிவித்துள்ளார். எவ்வளவு பெரிய தொழிற்சாலை, பிரிட்டனில் எங்கு இந்த தொழிற்சாலைகள் அமைய இருக்கிறது உள்ளிட்ட மேலும் விவரங்களை இருவரும் உடனடியாக வெளியிடவில்லை…