ரோலர் கோஸ்டர் மோடில் டாடா மோட்டார்ஸ்..
மீண்டும் ரோலர் கோஸ்டர் மோடில் டாடா மோட்டர்ஸ் பயணித்து வருகிறது என்று விமர்சனம் எழுந்துள்ளது. 2024 நிதியாண்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருவாய் 27 விழுக்காடாக உயர்ந்து 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்திருந்தாலும், போட்ட முதலீடு திரும்பி வந்த விகிதம் கடந்தாண்டு 7 விழுக்காடாகவும், 2024 நிதியாண்டில் அது 19 விழுக்காடாக உயர்ந்துள்ளது. ஜாக்குவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் 4 ஆவது காலாண்டின் தரவுகள் அந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனை அளவு 9.1 விழுக்காடு குறைந்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது. போதுமான மார்ஜினில் கார்களை விற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இது தவிர்த்து ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் விற்பனை ஒற்றை இலக்கத்திலேயே இருக்கின்றன. ஐரோப்பாவில் அந்த கார்களுக்கு மவுசு படிப்படியாக குறைந்தும் வருகிறது.
இது ஒரு பக்கம் இருந்தாலும் நிறுவனத்தின் பணப்புழக்கம் வெகுவாக குறைந்திருக்கிறது. இந்த காரணிகள் போக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வணிக வாகனங்களுக்கான அளவும் குறைந்து வருகிறது. பேருந்துகள், லாரிகள், கனரக சரக்கு வாகனங்களின் விற்பனை வெறும் 1 விழுக்காடு மட்டுமே வளர்ந்திருக்கிறது. ஒழுங்குமுறை கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக வணிக வாகனங்களின் விற்பனை மந்தமாகவே நடந்து வருவதாக டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். தொடர் ஏற்ற இறக்கம் குறித்து டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள் கூறும்போது, கடந்த இரண்டு ஆண்டுகளாக அட்டகாசமாக இருந்த தனிநபர் வாகன விற்பனை, இந்தாண்டு சற்று குறைந்திருக்கிறது என்றார்.
மின்சார மற்றும் சிஎன்ஜி மாடல் வாகனங்களை புதிதாக அறிமுகப்படுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. டாடா மோட்டார்ஸின் மின்சார கார்கள் விற்பனையில் அந்நிறுவனத்துக்கு வருவாயாக 2,600கோடி ரூபாய் வந்திருப்பதாகவும், பேட்டரியின் விலை குறைந்திருப்பதையும் அந்நிறுவன அதிகாரிகள் சுட்டிக்காட்டி வருகின்றனர். டாடா ஏஸ் எனப்படும் மின்சார “குட்டியானை” மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மின்சார பேருந்துகள், மின்சார அலுவலக பேருந்துகளை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் டாடா மோட்டார்ஸ் அதிகாரிகள். ஒரு பக்கம் நல்ல செய்தியாகவும் இருக்கும் டாடா மோட்டார்ஸில் சில மோசமான பக்கங்களும் இருக்கத்தான் செய்கின்றன.