5.1 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் டாடா மோட்டார்ஸ்..
நடப்பு நிதியாண்டில் இந்திய மதிப்பில் 43 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய டாடாமோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டில் மிகப்பெரிய லாபத்தை பதிவு செய்த அந்நிறுவனம்,உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் இந்த முதலீடு செய்ய இருக்கிறது.
ஜாக்குவார்லேண்ட்ரோவர் , வணிக மற்றும் பயணிகள் வாகனங்களிலும் முதலீடுகள் பிரித்து அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 2023-24-ல் மட்டும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 41,200 கோடி ரூபாய் முதலீடு செய்திருந்தது. அதில் ஜாகுவார் லேண்ட் ரோவரில் மட்டும் 33 ஆயிரம் கோடி ரூபாயும், 8,200 கோடி ரூபாயில் டாடா மோட்டார்ஸிலும் முதலீடு செய்யப்பட்டது. 2025 நிதியாண்டில் ஜாக்குவார் லேண்ட் ரோவர் பிரிவுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாயும், டாடா மோட்டார்ஸில் 8ஆயிரம் கோடி ரூபாயும் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜாகுவார் லேண்ட் ரோவர் ரக கார் அடுத்த 10 ஆண்டுகளில் மின்சார மயமாக மாற்றும் திட்டம் உள்ளதால் 1.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கையெழுத்திட்டது. இதன்படி தமிழ்நாட்டில் ஜாகுவார் லேண்ட்ரோவர் கார் உற்பத்தி தொடங்க இருக்கிறது. பஞ்ச் ரக கார்களில் மின்சார வசதியை அறிமுகப்படுத்திய டாடா நிறுவனம் அடுத்ததாக கர்வ், ஹாரியர் வகைகளிலும் மின்சார கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. சியேரா ரகத்திலும் அடுத்தாண்டு மின்சார கார்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் டாடாமோட்டார்ஸ் நிறுவனம் கடன் இல்லாத ஒரு நிறுவனமாக உள்ளது. வணிக வாகனங்களின் விற்பனை பெரியளவில் மாற்றமின்றி இறுக்கிறது. நடப்பாண்டில் அந்நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை ஒற்றை இலக்கத்தில்தான் இருக்கும் என்றும்,விற்பனை ஓரளவுக்கு சாதகமாகத்தான் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் கார்கள் விற்பனை 25 விழுக்காடு உயர்ந்து 4 லட்சத்து ஆயிரத்து 300 கார்கள் விற்றுள்ளன. மேலும் கடந்த மார்ச் மாதத்தில் 1,33,000 கார்களுக்கான ஆர்டர்களை ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் பெற்றுள்ளது.