₹40,000 கோடியை திரட்ட ஒப்புதல் கோரும் டாடா சன்ஸ்! ஏன்?
டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான டாடா சன்ஸ், பங்குதாரர்களுக்கு அனுப்பப்பட்ட அறிவிப்பின் படி, மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் உட்பட பத்திரங்கள் மூலம் ரூ 40,000 கோடி வரை நிதி திரட்ட பங்குதாரர்களின் ஒப்புதலை கோரியுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இணையவழி நடைபெறும் நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் செப்டம்பர் 14 அன்று பங்குதாரர்கள் இந்த முன்மொழிவுக்கு வாக்களிக்கயிருக்கிறார்கள்.
இந்த தீர்மானம் செயல்படுத்தப்படும் பட்சத்தில், நிறுவனம் அதன் வளர்ச்சித்திட்டங்களுக்கு தேவைப்படும்போது சந்தையின் வாய்ப்புகளை சாதகமாக்கிக்கொள்ள இந்த தொகை உதவும். வரவிருக்கும் மாதங்களில் ஏர் இந்தியாவை கையகப்படுத்துவதில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது டாடா சன்ஸ், இது இந்திய அரசாங்கத்தால் அதன் முதலீட்டுவிலகல் திட்டத்தின் பகுதியாக விற்கப்படுகிறது. தவிர தனது நிதி சேவைகள், ரியல் எஸ்டேட் மற்றும் உள்கட்டமைப்பு வணிகங்களில் முதலீடு செய்ய நிதியைப் பயன்படுத்தயிருக்கிறது.
டாடா குழுமம் தனது சூப்பர்-ஆப்பை அறிமுகப்படுத்த உள்ளது, இது குழுவின் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வரும். புதிய பிராண்டுகள் மற்றும் மின்னணு சில்லறை வர்த்தக சேவைகள் வழங்கும் நிறுவனங்களை வாங்குவதில் பெரும் முதலீடுகளைச் செய்து வருகிறது டாடா. உயர்ரக வாகனங்கள் மற்றும் நவீன மின்சாதனங்களுக்கான உலகளாவிய மின்னணு சிப் தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு அதனை தயாரிக்கும் திட்டங்களிலும் நுழைய இருப்பதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறது.
டாடா சன்ஸ், நிதி திரட்ட கடன் வழியைப் பயன்படுத்துகிறது, ஏனெனில் இதன் கடன்பெறும் தகுதிநிலை அதிக மதிப்பீட்டைக் கொண்டுள்ளது மேலும் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் உட்பட உயர்மட்ட நிறுவன முதலீட்டாளர்கள் பாதுகாப்பான வருமானத்திற்காக இத்தகைய கடன் கருவிகளில் அதிக முதலீடு செய்கிறார்கள். “டாடா சன்ஸின் நம்பகத்தன்மை மற்றும் கடன் திருப்பும் தரமானது வலுவான முதலீட்டு தரமாக நாங்கள் கருதுகிறோம் “என்று சமீபத்திய எஸ் அண்ட் பி (S&P) அறிக்கை கூறுகிறது.
சவுரப் அகர்வால் மற்றும் ரால்ஃப் ஸ்பெத் இயக்குநர்களாக மீண்டும் நியமனம் செய்வதற்கும் சார்பற்ற இயக்குனராக ஹரீஷ் மன்வாணிக்கும் பங்குதாரர்கள் வாக்களிக்க உள்ளனர். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் என் சந்திரசேகரனின் இயக்குனருக்கான பதவிக்காலம் முடிவடையும் நிலையில் பங்குதாரர்களுக்கான அறிக்கையில் அவரது மறுநியமனம் பற்றி மௌனம் காக்கப்பட்டுள்ளது.