ஆட்குறைப்பால் டாடா ஸ்டீல் விலையேற்றம்..
இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் டாடா நிறுவனத்தின் உருக்காலை இருக்கிறது. டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் நெதர்லாந்து ஆலையில் 800 பேரை பணிநீக்கம் செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகளில் டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 1 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. தொடர்ந்து 5 ஆவது முறையாக இந்திய சந்தைகளில் டாடா ஸ்டீல்ஸ் நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. பணிநீக்கம் செய்யப்படுவோரில் 500 பேர் நிரந்தர தொழிலாளர்கள்,300 பேர் ஒப்பந்த பணியாளர்களாவர். டாடா ஸ்டீல்ஸ் நிறுவனத்தின் ஆலைகளில் கரியமில வாயு வெளியேற்றத்தை தடுக்கும் வகையில் புதிய ஆற்றலை பயன்படுத்தப்பட இருக்கிறது. நெதர்லாந்தில் உள்ள டாடா ஸ்டீல் ஆலையில், கரியமில வாயு வெளியேற்றத்தை 7 விழுக்காடு குறைக்கும் முயற்சியில் டாடா ஸ்டீல்ஸ் இறங்கியுள்ளது.
கரியமில வாயு வெளியேற்றத்தை தடுக்க டச்சு அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது.
நிலக்கரியை பயன்படுத்துவதற்கு பதிலாக ஹைட்ரஜன் மூலம் ஸ்டீல் உற்பத்தி செய்யவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
2030ஆம் ஆண்டுக்குள் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வர இருக்கிறது. டாடா ஸ்டீல்ஸ் நிறுவனம்தான் நெதர்லாந்தில் அதிக கரியமிலவாயு வெளியேற்றும் தனிப்பட்ட நிறுவனம் என்ற நிலையை மாற்ற டாடா ஸ்டீல்ஸ் எடுத்துள்ள திடமான முடிவால் அந்நாட்டு சுற்றுச்சூழல் மாசு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.