சட்ட நடவடிக்கை எடுக்கும் டாடா ஸ்டீல்..
பிரிட்டனின் யுனைட் யூனியன் அமைப்பின் மீது டாடா ஸ்டீல் தனது சட்ட நடவடிக்கையை தொடுத்துள்ளது. அப்படி என்னதான் பிரச்சனை பார்க்கலாம் வாங்க.. வரும் ஜூலை 8 ஆம் தேதியில் இருந்து பிரிட்டனில் உள்ள டாடா ஸ்டீல் ஆலையின் பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர். மொத்தம் 1500 பணியாளர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட இருக்கின்றனர். எரிவாயு மூலம் இயங்கும் உருக்காலைகளில் 2 ஆயிரத்து 800 பணியாளர்களை நீக்கும் பணிகளில் டாடா நிறுவனம் ஈடுபட இருக்கிறது. இதனை கண்டித்துத்தான் பிரிட்டன் பணியாளர்கள் சங்கம் போராட்டத்தை அறிவித்தனர். கடந்த 40 ஆண்டுகளில் பிரிட்டனில் உள்ள உருக்காலை ஊழியர்கள் முதல் முறையாக போராட்டத்தை அறிவித்துள்ளனர். போர்ட் டல்பாட் மற்றும் வேல்ஸில் உள்ள லான்வெர்ன் ஆகிய இடங்களில் உள்ள ஆலைகளில் இந்த போராட்டமானது நடைபெற இருக்கிறது. பிரிட்டனில் குறிப்பிட்ட இரண்டு இடங்களில் இருக்கும் ஆலைகளும் நஷ்டம் ஏற்படுத்தி வருவதால் அதனை மூட கடந்த ஜனவரி மாதமே டாடா நிறுவனம் திட்டமிட்டது. மேலும் அரசின் உதவியுடன் கரியமில வாயு குறைவாக வெளியேற்றும் உருக்கு ஆலைகளை நிர்வகிக்கவும் டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.
போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆலையை விரைந்து மூட அதிக பணிகளை செய்வோம் என்றும் டாடா நிறுவனம் எச்சரித்துள்ளது. போராட்டம் நடத்த இருக்கும் பணியாளர்களை ஏற்கனவே டாடா ஸ்டீல் அனுகி பேச்சுவார்த்தையும் நடத்திப்பார்த்துவிட்டது. வழக்கமான எரிபொருளுக்கு பதிலாக மின்சாரத்தை பயன்படுத்த டாடா நிறுவனம் முடிவெடுத்துள்ள நிலையில் அதற்கான பணிகள் வரும் செப்டம்பரில் நடக்க இருக்கிறது. தற்போதுள்ள உருக்காலைக்கு மாற்றாக வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் புதிய ஆலையை கட்டவும் டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது.