டாடாவின் அடுத்த அதிரடி!!!!!
தொட்டதெல்லாம் பொன்னாகும் என்ற பழமொழிக்கு ஏற்ப, கால்வைக்கும் எல்லா தொழில்களிலும் ஜாம்பவானாக வலம் வரும் ஒரு நிறுவனம் என்றால் அது டாடா நிறுவனம் மட்டுமே. இந்த வியாபார சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆண்டு வருபவர் நடராஜன் சந்திரசேகரன். இவர் கடந்த வியாழக்கிழமை பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே செமிகண்டக்டர்கள் எனப்படும் அரைக்கடத்தி உற்பத்தி செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில், செமி கண்டக்டர்கள் உற்பத்தியில் உலகளவில் ஏற்பட்ட பாதிப்புகள் சீரடையாமல் உள்ளதாக சுட்டிக்காட்டிய சந்திரசேகரன் டாடா குழுமம் உற்பத்தி செய்ய உள்ள அரைக்கடத்திகளால் அந்த இடைவெளி குறையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மின்சார வாகன உற்பத்தியில் புதுப்புது புதுமைகளை புகுத்த இருப்பதாக அறிவித்துள்ள சந்திரசேகரன், ஏற்கனவே சிப் தயாரித்து வரும் நிறுவனங்களுடன் கைகோர்க்க அதிக முயற்சி எடுத்து வருவதாக கூறியுள்ள அவர், சிப் உற்பத்தியால் இந்தியாவில் நிலவும் பற்றாக்குறையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்றும் சூசகமாக தெரிவித்தார். அடுத்த 5 ஆண்டுகளில் 90 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார். கொரோனா பெருந்தொற்றால் சீனாவை மட்டுமே நம்பி இருக்க கூடாது என்ற நிலையை சிப் உற்பத்தி துறை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய சந்திரசேகரன், இந்தியாவுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு என்றும் நம்பிக்கையூட்டினார்.