வருமான வரி தாக்கல் – ஒருமுறை மட்டுமே அனுமதி ..!!
திருத்தப்பட்ட வருமான வரி ரிட்டன்களை செலுத்துபவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய நேரடி வரிகள் வாரியத்தின்(CBDT) தலைவர் ஜே.பி.மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.
வருமான வரி செலுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு மாற்றி வரும் நிலையில், வரி செலுத்துபவர்கள் ஒரு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்தான் திருத்தப்பட்ட வருமான வரியை தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கையில், வருமான வரி தாக்கல் செய்த பிறகு அதில் ஏதும் தவறுகள் இருந்தால் அதனை திருத்திக் கொள்வதற்கு 2 ஆண்டுகள் வரை அவகாசம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இவ்வாறு திருத்தப்பட்ட வருமான வரி ரிட்டனை(ITRs)12 மாதங்களுக்குள் தாக்கல் செய்தால் வரித் தொகையில் 25 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டும். 12 மாதங்களை கடந்து விட்டால் வரித் தொகையில் 50 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான், இதுபோன்று திருத்தப்பட்ட வருமான வரி ரிட்டன்களை செலுத்துபவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால், உண்மையாகவே வருமான வரித் தாக்கல் செய்யாமல் தவற விட்டவர்களுக்கு உதவ முடியும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியத்தின்(CBDT) தலைவர் ஜே.பி.மொஹபத்ரா கூறியுள்ளார்.