அமேசான் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்கிறதா?
கடனில் சிக்கி தவிக்கும் வோடபோன் ஐடியா நிறுவனத்தில் அமேசான் நிறுவனம் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், வோடபோன் ஐடியா நிறுவனத்தின் பங்குகள் சற்று உயர தொடங்கின.
இந்நிலையில், இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகாமல் இருக்கும் நிலையில், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது குறித்து, முதலீட்டாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் முதலீடு செய்ய அமேசான் முனைப்பு காட்டி வருகிறது. காரணம், ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள், ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களுடன் ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு, வோடபோன் ஐடியாவில் ஒரு நிறுவனம் முதலீடு செய்ய வருவதாக தகவல் அண்மையில் வெளியானது. ஒரு நிறுவனம், வோடபோன் ஐடியாவில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி, அடுத்த நாளே அது புரளி என்று செய்தி வெளியாவது ஒன்றும் புதிது அல்ல. 2020ம் ஆண்டே கூகுள் நிறுவனம் வோடபோன் ஐடியா நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. இறுதியில் அது உண்மை இல்லை என்று கூறி, அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் தொலைத்தொடர்பு துறை போட்டியில், வோடபோன் ஐடியா நீடிக்க முதலீடுகள் தேவைப்படுகிறது. அந்த முதலீட்டை எப்படி இந்நிறுவனம் கொண்டு வர போகிறது என்பதை அனைவரும் உற்று நோக்கி உள்ளனர்.