இந்திய இளைஞர்களுக்கு வந்த சோதனை..
கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் என்ற நிறுவனம்,இந்திய இளைஞர்கள் குறித்து ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய இளைஞர்களில் பலர் டிப்ளமோ மற்றும் டிகிரி படித்திருந்தாலும், வேலைவாய்ப்பின்மை அதிகளவில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 4-5 ஆண்டுகளில் நிலைமை மாறியிருந்தாலும் முழுமையாக மாறவில்லை என்று அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.வேலை தேடுவோருக்கும்,வேலை வாய்ப்புகளுக்கும் நிறைய இடைவெளி இருப்பதாக கூறியுள்ள அந்த ஆய்வறிக்கை,இந்த இடைவெளி குறைய நாட்கள் அதிகம் எடுத்துக்கொள்ளும் என்றும் கூறியுள்ளது. ஜூன் 2023 தரவுகளின்படி டிப்ளமோ படித்துவிட்டு வேலைவாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் இளைஞர்களின் விகிதம் 12.1%ஆக இருக்கிறதாம்.13.4%இளைஞர்கள் பட்டம்பெற்றும் வேலை கிடைக்கவில்லை என்றும்,12.1%முதுநிலை பட்டதாரிகளுக்கும் வேலை கிடைக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு இருந்ததைவிட இந்தாண்டு நிறைய மாற்றங்கள் நடந்திருப்பதாக கூறியுள்ள அந்த அறிக்கை, சம்பளத்துக்கு வேலை செய்வோரின் எண்ணிக்கை குறைந்து, சுயமாக வேலை செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கிறது. எனினும் சம்பளத்துக்கு வேலை செய்வோரின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. விவசாயம்,வணிகம்,போக்குவரத்துத்துறையில் சுயதொழில் செய்ய விரும்புவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. கிராமபுறங்களில் குடும்பத்தில் பலரும் வேலைக்கு செல்லும் நிலை மாறியிருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. மாத சம்பளம் பெறுவோரின் வருமானம் 3.4% உயர்ந்திருப்பதாகவும், (சராசரியாக)சுய தொழில் செய்வோரின் வருமானம் 1.8%உயர்ந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தகவல் தொழில்நுட்பத்துறையில் சிக்கன நடவடிக்கைகள் எடுப்பதால் மாத சம்பளம் பெறுவோரில் குறிப்பாக ஐடி துறையில் வேலை செய்வோருக்கு சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.