விலைவாசி உயர்வால் உஷாரான நிலையில் மத்திய அரசு..
தக்காளியும் மற்ற காய்கனிகள் விலையும் வீடுகள் மட்டுமில்லை, அரசாங்கம் வரை முக்கிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து தற்காப்பு நடவடிக்கையில் மத்திய அரசும்,ரிசர்வ் வங்கியும் இறங்கியுள்ளன. காய்கனிகள், பருப்பு வகைகள் உற்பத்தியில் காலநிலை மாற்றம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. மே மாதத்தில் 3விழுக்காடாக இருந்த விலைவாசி உயர்வு ஜூன் மாதத்தில் 4.5விழுக்காடாக உயர்ந்துள்ளது. விலைவாசி உயர்வு தொடர்பாக நிதியமைச்சகம் பொருளாதார ஆய்வறிக்கையை கடந்த 3ஆம் தேதி வெளியிட்டுள்ளது. 2.96விழுக்காட்டில் இருந்து 4.49 விழுக்காடாக விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளது.2 முதல் 6 விழுக்காடு வரை விலைவாசி உயர்வு தாங்கிக்கொள்ளும் சக்தி இருக்கும் நிலையில் ஜூலையில் இது அதிகரித்து இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பணவீக்கம் தொடர்பான அறிவிப்பு வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பணவீக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாவதற்கு 4 நாட்களுக்கு முன்பே அதாவது வரும் 10ஆம் தேதி நிதி கொள்கை கூட்டம் நடைபெற இருக்கிறது. இதில் விலைவாசியை கட்டுப்படுத்த எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட இருக்கிறது. தற்போது இருக்கும் வட்டிவிகிதமே தொடர வாய்ப்பிருப்பதாகவும், திடீர் வட்டி விகித உயர்வு இருக்க வாய்ப்பு குறைவு என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே விலைவாசி உயர்வு குறித்து நிதி கொள்கை கூட்டம் ஜூன் மாதத்தில் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில் திடீரென கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படவும் வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இத்தனை சிக்கல்களையும் மீறி இந்தியாவில் 2023-24 காலகட்டத்தில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி 6.5விழுக்காடு வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் சர்வதேச நாணய நிதியம் இந்தியாவின் வளர்ச்சியை 6.1விழுக்காடாகவே கணித்துள்ளது. நிதி பற்றாக்குறையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.