போர் சூழல் சவாலாக உள்ளது…
கொரோனா காலகட்டத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் ஏற்பட்ட பாதிப்பே இதுவரை ஈடு செய்ய இயலாத வகையில் உள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே மோதல் நீடித்து வருகிறது. இது பற்றி உலக வங்கித்தலைவர் அஜய் பங்கா தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதன்படி உலக நாடுகள் பலவும் தங்கள் உள்நாட்டு மத்திய வங்கிகளில் கடன் தரும் விகிதத்தை அதிகளவில் வைப்பது தொடரும் என்று அஜய் பங்கா கூறியுள்ளார்.போர்கள் உலகளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக கூறிய அவர்,பல நாடுகளின் மத்திய வங்கிகளும்,பொருளாதாரத்தை மீட்க பல நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார். சீனாவுடன் வளர்ச்சிப்பணிகளுக்காக கைகோர்த்துள்ளதாக கூறிய பங்கா, கடன் தருவதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கடன் தருவதில் வெளிப்படைத்தன்மை இருக்கும்பட்சத்தில் அது ஏழை நாடுகளுக்கு கடன் தர பெரிதும் உதவும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடன்கள் வழங்குவதில் ஏற்கனவே உள்ள உபகரணங்கள், திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றும் உலக நாடுகளை அவர் கேட்டுக்கொண்டார்.ஏற்கனவே கடன் பெற்றுள்ள நாடுகளுக்கு இது பெரிதும் உதவும் என்றும் சுட்டிக்காட்டினார். ஒரு நாட்டின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டுமானால் குறைவான வட்டியில், சில நேரங்களில் வட்டியே இல்லாமல்கூட கடன்கள் வழங்குவதில் உலக வங்கி முன்னோடியாக திகழ்கிறது. அப்படிப்பட்ட உலக வங்கி,தனது புதிய நிலைப்பாட்டை எடுத்துள்ளதும்,வெளிப்படைத்தன்மையை உறுதிபடுத்துவதும் பல பெரிய நாடுகள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.