ஊழியர்களுக்கு கார் பரிசளித்த நிறுவனம்!!!

ஊர் உலகமே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவித்து வரும் சூழலில் நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனம் உங்களுக்கு சின்னதாய் ஏதாவது பரிசளித்தாலே பெரிய மகிழ்ச்சி கிடைக்கும் அல்லவா, அப்படித்தான் அகமதாபாத்தில் ஒரு நிறுவனம் பெரிய மகிழ்ச்சியை அதன் சில பணியாளர்களுக்கு பரிசளித்துள்ளது. tridhya tech என்று பெயரிடப்பட்டுள்ள அந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அகமதாபாத்தை தலைமையிடமாக கொண்டு 5 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.நிறுவனத்தின் இலக்கை எட்ட உதவிய நெடுநாள் ஊழியர்களை கவுரவிக்க விரும்பிய நிறுவனம், 13 ஊழியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு டொயோட்டா கிலான்சா ரக காரை பரிசளித்துள்ளது.7 மற்றும் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கார்கள் பரிசாக கிடைத்ததும் மகிழ்ச்சியில் ஊழியர்கள் திக்குமுக்காடி போயுள்ளனர். கடுமையாக உழைத்த பணியாளர்களை கார் வழங்கி கவுரவித்த நிறுவனத்தை பலரும் இணையத்தில் புகழ்ந்து வருகின்றனர். ஊரே ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சூழலில் பழைய,நல்ல திறமையுள்ள பணியாளர்களை தக்க வைக்க இத்தகைய பரிசுகள் அளிப்பதில் தவறில்லை என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.