தொழிலதிபர் தந்தைக்கு பக்கபலமாக களமிறங்கும் மகள்….
பிஸ்லரி என்ற தண்ணீர் பாட்டிலை ஒருமுறையாவது நகரவாசிகள் குடித்திருப்பார்கள் குறைந்தபட்சம் இந்த தண்ணீர் பாட்டிலின் பெயரையாவது பொதுமக்கள் தெரிந்து வைத்திருப்பார்கள் அந்தளவுக்கு பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானது பிஸ்லரி நிறுவன தண்ணீர் பாட்டில். இந்த தண்ணீர் பாட்டில் நிறுவனத்தை டாடா குழுமத்தின் வாடிக்கையாளர் பொருட்கள் பிரிவு வாங்குவதாக நாம் தொடர்ச்சியாக தகவல்களை வெளியிட்டு வந்தோம். இந்த நிலையில் கடைசி நேரத்தில் தண்ணீர் பாட்டில் நிறுவனத்தை வாங்கும் முடிவை டாடா குழுமம் பின்வாங்கிவிட்டதாக தகவல் கசிந்துள்ளது. பிஸ்லரி நிறுவனத்தை துவக்கத்தில் இருந்து நிர்வகித்து வருபவர் ரமேஷ் சவ்ஹான். இவர்தான் டாடா நிறுவனத்துக்கு தனது நிறுவனத்தை விற்பது மகிழ்ச்சி என்றெல்லாம் பேட்டி அளித்தார். இந்த நிலையில் டாடா குழுமம் பின்வாங்கியதை அடுத்து தனக்கு பிறகு தனது நிறுவனத்தை மகள் ஜெயந்தி சவ்ஹான் வழிநடத்த இருப்பதாக அவர் பேட்டி அளித்துள்ளார். தந்தை வளர்த்தெடுத்த நிறுவனத்தை 42 வயதாகும் ஜெயந்தி சவ்ஹான் தற்போது முழுமையாக முன்னெடுத்து செல்ல உள்ளார். 7 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நடக்க இருந்த டீல் பாதியிலேயே புஸ்க் ஆகிவிடும் என்று யாரும் எதர்பாராத சூழலில் பிஸ்லரி நிறுவன கைமாற்றம் நின்று போனது. தற்போது பிஸ்லரி நிறுவனத்தின் துணைத்தலைவராக இருக்கும் ஜெயந்தி, டாடா குழுமத்துக்கு பிஸ்லரியை விற்க மறுப்பு தெரிவித்ததாகவும் ஒரு தரப்பு தகவல் கூறுகிறது. மேலும் கோடை காலம் நெருங்கி வருவதால் தற்போது டாடாவிடம் கைமாற்றினால் வணிகம் பாதிக்கப்படும் என்று கருதியதால் இந்த டீல் நின்று போயிருக்கலாம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 2 ஆண்டுகளாக பிஸ்லரிக்கு கொக்கி போட்டு வந்த டாடா குழுமம் கடைசி நேரத்தில் பின்வாங்கியுள்ளது. வாங்க விரும்பும் நிறுவனங்கள் பிஸ்லரியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் தகவல் கசிந்துள்ளது.