ஆப்பிள் நிறுவனம் செய்துள்ள அதிரடி மாற்றம்..
அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்களுக்கு தகுந்தபடி மேக் கணினிகளின் டிசைன்களை ஆப்பிள் நிறுவனம் மாற்ற திட்டமிட்டுள்ளது. எம்3 என்ற சிப்கள் மூலம் இயங்கும் மேக் வகை கணினிகளை அறிமுகப்படுத்தி 5 மாதங்கள்தான் ஆகும் நிலையில், தற்போது எம்4 என்ற புதிய சிப்செட்டை ஆப்பிள் கையில் எடுத்துள்ளது. புதிய எம்4 ரக சிப்கள் உடன் உருவாகும் கணினிகள் 3 வகைகளில் உற்பத்தியாக உள்ளதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2022-ல் மேக் ரக கணினிகளின் விற்பனை கிட்டத்தட்ட 27 விழுக்காடு வீழ்ந்தது. இதனை ஊக்கப்படுத்த கடந்தாண்டு அக்டோபரில் எம்3 ரக சிப் உடன் கூடிய கணினிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. செயற்கை நுண்ணறிவில் கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த போட்டியை சமாளிக்கும் வகையில் புதிய சிப்களை ஆப்பிள் களமிறக்கியுள்ளது. புதிய ரக கணினிகளை அடுத்தாண்டு தொடக்கத்தில் சந்தைக்கு கொண்டுவர அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எம் 4 ரக சிப்களுடன் 14 அங்குல மேக் புக் புரோ, உயர் ரக 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மேகம்புக் புரோ மற்றும் மேக் மினி ரகங்களை வெளியிடவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போது சந்தையில் உள்ள மேக்புக்களில் குறிப்பாக மேக்புக் ஏர் ரக கணினியில் எம்3 ரக சிப் களும், மேக் ஸ்டுடியோ, மேக் புரோ ரகங்களில் எம்2 ரக புராசசர்களும் உள்ளன. புதிய பொருட்களின் அறிவிப்பு வரும் ஜூன் மாதத்தில் வெளியாக இருக்கிறது. டோடான், பிராவா, ஹிட்ரா என்று மூன்று வகை கணினிகளுக்கு ரகசிய பெயர்களையும் அந்நிறுவனம் சூட்டியுள்ளது. ஏற்கனவே உள்ள கணினிகளை போல இல்லாமல் புராசசர்களுக்கு உதவும் வகையில் அதிக மெமரி உடன் புதிய சிப் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐபோன்களிலும் செயற்கை நுண்ணறிவுக்கு தகுந்தபடி புராசசர்கள் மாற்றம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2010ஆம் ஆண்டு முதல் ஐபோன்4 மற்றும் ஐபேன் ஆகியவற்றிற்கு சொந்த செமிகண்டக்டர்களை ஆப்பிள் நிறுவனம் பயன்படுத்தி வருகிறது. 2020-ல்தான் மேக் வகை கணினிகளில் சொந்த சிப்களை ஆப்பிள் பயன்படுத்தியது. இண்டல் நிறுவன சிப்களை நாடாமல் இருக்கவே ஆப்பிள் நிறுவனம் இந்த முயற்சிகளை செய்து வருகிறது. இதுவரை ஆப்பிள் நிறுவனம் கையாண்ட அனைத்து பொருட்களும் மிகச்சிறிய பொருட்களாகவும் அதிக பேட்டரி வசதியும் கொண்டதாக இருக்கிறது. இதனால் அதிக கூலிங் ஃபேன்கள் தேவைப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.