குப்பையையும் காசாக்கும் அரசு..
தேவையில்லா பொருட்களை விற்று பணமாக்குவது ஒரு கலை. அதில் மத்திய அரசு கைதேர்ந்ததாக மாறி வருகிறது என்றால் அது மிகையல்ல.சந்தியானை விண்ணுக்கு அனுப்ப தேவையான 600 கோடி ரூபாய் அளவுக்கு அரசு பைல்கள், தேவையில்லாத பொருட்கள், அரசு வாகனங்களை விற்றதில் வருமானம் கிடைத்திருக்கிறது. இந்த எண்ணிக்கை வரும் அக்டோபரில் ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என்கிறார்கள் விஷயம் அறிந்தவர்கள். கடந்தாண்டு சிறப்பு முகாம்கள் நடத்தியதில் அரசுக்கு 371கோடி ரூபாய் கிடைத்த நிலையில் இந்தாண்டும் வரும் 2ஆம் தேதி முதல் சுத்தப்படுத்தும் இயக்கம் தொடங்கப்பட இருப்பதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பழைய கோப்புகளை சுத்தப்படுத்துவதால் மட்டும் அரசுக்கு மாதந்தோறும் 20 கோடி ரூபாய் அளவுக்கு பணம் கிடைக்கிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 31 லட்சம் அரசு கோப்புகள் தேவையற்ற நிலையில் தூக்கி வீசப்பட்டுள்ளன.இதன் மூலம் மட்டும் 158 லட்சம் சதுரடி இடம் காலியாக மாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு மட்டும் 90 லட்சம் சதுரஅடி இடம் காலியாகியுள்ளது.இந்தாண்டு இதனை 100 லட்சம் சதுரடியாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாம். செப்டம்பர் 15 முதல் 30ஆம் தேதி வரை இதற்கான பணிகளை முன்னெடுத்து காந்தி ஜெயந்தி முதல் 31 ஆம் தேதி வரை செயல்படுத்தி பணமாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவிக்க இருக்கிறார்.