விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு…
விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கொரோனாவுக்கு பிறகு டிசம்பரில்தான் அதிகளவாக பதிவாகியுள்ளது.
விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்திருந்தாலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருப்பதாக விமான டிக்கெட் சேவை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 20 விழுக்காடு வரை விமான கட்டணங்கள் மற்றும் புக்கிங் வழக்கத்தை விட டிசம்பர் மாதத்தில் உயர்ந்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. டிசம்பரில் மட்டும் சுமார் 4.5 லட்சம் பேர் விமானத்தில் பறக்க விரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மேமாதத்தில் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் விமானங்களில் சென்றதே அதிகபட்ச அளவாக இருந்த நிலையில் அதனை இந்தாண்டு டிசம்பர் மாதம் தகர்த்துள்ளது. விமான எரிபொருள் விலை சற்று குறைந்துள்ளபோதும் விமான டிக்கெட் உயர்ந்தே காணப்படுகிறது. டெல்லியில் விமான எரிபொருளின் விலை டிசம்பரில் மட்டும் 4.6%விலை குறைந்து 1 கிலோ லிட்டர் 1,06,155 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. உள்நாட்டு விமான சேவை கட்டணங்கள் 50% வரை உயர்ந்திருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை மட்டும் கிட்டத்தட்ட 50%விமான கட்டணம் உயர்ந்திருக்கிறது. குறிப்பாக டெல்லி-மும்பை, மும்பை-பெங்களூரு, மும்பை-சென்னை இடையே தேவை அதிகரித்து உள்ளது.
Goa, Jaipur, Delhi, Mumbai, Pune, Puducherry ஆகிய இடங்களுக்கு செல்லவே பலரும் விரும்புகின்றனராம். வெளிநாடுகளை பொருத்தவரை துபாய், பாங்காக், நியூயார்க், கொழும்பு, மாலே ஆகிய நகரங்களைத்தான் பலரும் தேர்ந்தெடுத்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு பறப்போரின் எண்ணிக்கை என்பது அடுத்தாண்டு ஜனவரியில் 12%அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வணிக நோக்க பயணங்கள் 33விழுக்காடு உயர்ந்திருக்கிறது. அடுத்த 3 மாதங்களுக்கு விமானங்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை கண்டிப்பாக அதிகரித்துதான் காணப்படும் என்று ரேட் கெயின் என்ற ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்குள்ளேயே சுற்றிப்பார்க்க 58%பயணிகள் விரும்புவதாகவும், கடந்தாண்டுபார்க்காத இடங்களை இந்தாண்டு பார்க்க இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். வெளிநாடுகளுக்கு பறப்போரின் எண்ணிக்கை கடந்தாண்டு 47%ஆக இருந்த நிலையில் இந்தாண்டு இது 50%ஆக உயர்ந்திருக்கிறது.