பங்குச்சந்தையில் நாம் செய்யும் தவறு என்ன தெரியுமா?
இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து அதீத ஏற்ற இறக்கத்திற்கு இடையே சிக்கி தவித்து வருகிறது. முதலீட்டாளர் தொடர்ந்து பல லட்சம் கோடிகளை இழந்து வருகிறார்கள். இதற்கு, அந்திய முதலீட்டாளர்கள், இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்து வெளியேறி வருவது தான் முக்கிய காரணமாக உள்ளது.
இந்திய பங்குச்சந்தைகளில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் விற்பனை செய்ய செய்ய, உள்நாட்டு முதலீட்டாளர்கள் அந்த பங்குகளை வாங்கிய வண்ணம் உள்ளனர். இது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு லாபத்துடன் வெளியேற நல்ல வாய்ப்பாக அமைகிறது. பொதுவாக, விலை குறைவாக இருக்கும் போது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்து, விலை அதிகரிக்கும் போது விற்பனை செய்து வெளியேறுகிறார்கள். ஆனால் உள்நாட்டு முதலீட்டாளர்கள் பெரும்பாலும், இதற்கு நேரெதிரே தான் செயல்படுகிறார்கள்.
உதாரணமாக, கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 2.2 டிரில்லியன் டாலர் அளவிற்கு பங்குகளை விற்பனை செய்துள்ளார்கள். அதே சமயம், இந்த கால கட்டத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்கள் சுமார் 2.65 டிரில்லியன் டாலர் அளவிற்கு பங்குகளை வாங்கி குவித்திருக்கிறார்கள்.
அதேபோல், 2011-12ம் ஆண்டு மற்றும் 2014-15ல் அந்நிய முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்கிய போது, உள்நாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்தார்கள். இது அந்நிய முதலீட்டாளர்களுக்கு, நல்ல வாய்ப்பாக பார்க்கப்பட்டது.
உள்நாட்டு முதலீட்டாளர்கள் என்பது, பெரும்பாலும், வங்கிகள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள், வருங்கால வைப்பு நிதி ஆணையம் போன்றவை தான். இவர்கள் முதலீடு செய்யும் பணம் என்பது, சாமானிய மக்களிடம் இருந்து பெறப்படும் பணம் தான் என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும். உள்நாட்டு முதலீட்டாளர்கள், இந்த அளவிற்கு முதலீடு செய்யவில்லை என்றால், தற்போது இருக்கும் நிலையை விட பங்குச்சந்தைகள் மிகக்குறைந்த நிலைக்கு சென்று இருக்கும். எனவே, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று வெளியேறுவதால் ஏற்படும் சரிவை, உள்நாட்டு முதலீட்டாளர்கள், முதலீடு செய்து சரிக்கட்டி வருகிறார்கள்.
இந்த போக்கு, தற்போதைய நிலையில் மேலும் அதிகரித்துவிட்டதாகவே தெரிகிறது. காரணம், முன்பை போல் அல்லாமல், தற்போது கிடைக்கும் அதிக வேக இணைய சேவை, புதியதாய் வந்து கொண்டே இருக்கும் பங்குதரகு நிறுவனங்கள், அவற்றை அணுகும் நடைமுறை மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது போன்றவை, பங்குச்சந்தைக்குள் முதலீடுகளை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அது, உண்மையில் யாருக்கும் பலன் தருவதாக இருக்கிறது என்பதே மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.
ஆனால் இந்திய முதலீட்டாளர்களால், இந்திய பங்குச்சந்தைகளை, நீண்ட நாட்கள் உயரத்திலேயே வைத்திருக்க முடியாது என்பது தான் தற்போதைய நிலையாக உள்ளது.