கர்நாடகா வங்கி: நிர்வாகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் இடையே மோதல்!
கர்நாடகா வங்கி: நிர்வாகத்திற்கும் கலாச்சாரத்திற்கும் இடையே மோதல்!
கர்நாடகா வங்கி அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகிருஷ்ணன் ஹரி ஹர சர்மா, நிர்வாக இயக்குனர் சேகர் ராவ் ஆகிய இருவரும் திடீரென ராஜினாமா செய்ததன் பின்னணியில், நிர்வாகத்திற்கும், வங்கியின் நூற்றாண்டு கால கலாச்சாரத்திற்கும் இடையே நிலவிய மோதலே காரணம் என்று கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம், வங்கி அதன் 101வது ஆண்டு விழா கொண்டாடியபோது, சர்மா, ராவ், வங்கியின் தலைவர் உட்பட அனைவரும் ஒன்றாக நிகழ்வில் கலந்துகொண்டனர். ஆனால் சில மாதங்களில் இரு முக்கிய அதிகாரிகளும் ராஜினாமா செய்தனர்.
தனிப்பட்ட காரணங்களைச் சுட்டிக்காட்டி ராஜினாமா செய்துள்ளதாக இருவரும் கூறினாலும், இந்த ராஜினாமாக்களுக்கு பின்னால் வேறு காரணங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.
கலாச்சார மோதல்கள்
கர்நாடகா வங்கி, கர்நாடக மாநிலத்தில் உள்ள விவசாயிகள், வழக்கறிஞர்கள், வணிகர்களால் 1924-ல் தொடங்கப்பட்டது. இந்த வங்கிக்கு எந்த ஒரு குறிப்பிட்ட புரமோட்டரும் இல்லை.
அதன் கலாச்சாரம் ஒரு பொதுத்துறை வங்கியைப் போலவே உள்ளது. வங்கியின் நிர்வாகம், அதன் நூற்றாண்டு கால பாரம்பரியத்தில் உறுதியாக உள்ளது.
சர்மா, 99 ஆண்டுகால வரலாற்றில் வங்கியின் தலைமைப் பொறுப்பேற்ற முதல் “வெளியாட்களில்” ஒருவர்.
அவர் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டபோது, பெங்களூரில் இருந்து இயங்குவது, டிஜிட்டல்மயமாக்கலை அதிகப்படுத்துவது, வங்கி நிர்வாகத்தில் சுதந்திரம் ஆகிய மூன்று நிபந்தனைகளை முன்வைத்தார். வங்கியின் செயல்பாடு, நிதிநிலை அறிக்கைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் வங்கியின் கடன் வழங்கல் 27% அதிகரித்தது. மேலும், வாராக் கடன்களும் குறைந்தன.
இருப்பினும், சர்மா, ராவ் ராஜினாமாவுக்கு முக்கிய காரணமாக, வாரியக் கூட்டங்கள் கன்னடத்தில் நடப்பது, கர்நாடகாவில் உள்ள கிளைகள் மட்டும் 70% வணிகத்தை அளிப்பதால், “பாரத் கா கர்நாடகா பேங்க்” என்ற புதிய நிர்வாகத்தின் தொலைநோக்கு பார்வைக்கு பதிலாக, “கர்நாடகா பேங்க்” ஆகவே இருக்க வேண்டும் என ஒரு இயக்குனர் வாதிட்டது போன்ற கருத்து வேறுபாடுகள் மோதலை அதிகரித்தன.
இந்த அதிகார மோதல்கள், கலாச்சார முரண்பாடுகள் காரணமாகவே இரு முக்கிய அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர்.
இந்த வகையான மோதல், இந்தியாவின் பழமையான தனியார் வங்கிகளில் அடிக்கடி நடக்கும் ஒன்று என்றும், புதிய சிந்தனைகளை ஏற்காமல், பாரம்பரியத்தை மட்டுமே பின்பற்றுவது இத்தகைய வங்கிகளுக்கு சவாலாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
