விலை குறைய வாய்ப்பில்ல ராஜா…
இந்தியாவில் வரும் நாட்கள் பண்டிகை காலம் என்பதால் கச்சா எண்ணெய் மீதான வரிகள் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 6 ஆம் தேதி முதல் இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நடந்துவருகிறது. இதன் தாக்கத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது.கிட்டத் தட்ட 4 விழுக்காடு உயர்ந்துள்ளது. இது ஒரு பக்கம் இருந்தால் ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா இணைந்து கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்தது.இதன் காரணமாக ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 90 டாலர்களாக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் கலால் வரியை குறைக்க வாய்ப்பு குறைவு என்று கூறப்படுகிறது.
எதிர்வரும் தேர்தல் மற்றும் பண்டிகை காலகட்டத்தில் சலுகைகளை மத்திய அரசு அறிவிக்கலாம் என்று இருந்த நிலையில் திடீர் விலையேற்றம் அரசாங்கத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் போர் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை இந்திய அரசு முதிர்ச்சியுடன் அணுகும் என்று ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். மக்களை பாதிப்பில் இருந்து மீட்க அரசாங்கம்தான் இறுதி முடிவு எடுக்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 2021ஆம் ஆண்டு கலால் வரி குறைக்கப்பட்டது. மேலும் கடந்தாண்டு மேமாதத்தில் கலால் வரி குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்பிறகு கச்சா எண்ணெய் விலை உயரவோ,குறையவோ இல்லை. இந்த நிலையில் எண்ணெய் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு போதுமான வரிச்சலுகைகள் அளிக்கப்படப் போவதில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில்தான் மத்திய அரசு சமையல் எரிவாயு மீதான வரியையும் விலையையும் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. இதனால் ஏழை மக்கள் பலனடைய இருக்கின்றனர். பெட்ரோலிய அமைச்சகத்துக்கு ஏற்படும் பாதிப்பை மத்திய அரசு எப்படி சரிசெய்யப்போகிறது என்பதை காத்திருந்து தான் பார்க்கவேண்டும்.