சமையல் எண்ணெய் விலைய குறைங்க..!!
சர்வதேச சந்தை விலை நிலவரத்துக்கு தகுந்தபடி தங்கம்,கச்சா எண்ணெய் விலை மட்டுமல்ல, சமையல் எண்ணெய் விலையும் மாற்றம் காண்பது உண்டு. இந்த நிலையில் சமையல் எண்ணெய் விலையை லிட்டருக்கு 8 முதல் 12 ரூபாய் உடனடியாக குறைக்க வேண்டும் என்று எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. கடந்த 2020-21 காலகட்டத்தில் சர்வேச சந்தையில் நிலவிய உற்பத்தி குறைவு மற்றும் உற்பத்தி விலை அதிகரிப்பின் காரணமாக சமையல் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த சூழல் கடந்தாண்டே மாறத் தொடங்கியது. தற்போது உலகளவில் சமையல் எண்ணெய் விலை கடுமையாக வீழ்ந்துள்ளது. இதன் பலன் வாடிக்கையாளர்களுக்கு தர விரும்பும் மத்திய அரசு, எண்ணெய் உற்பத்தியாளர்களுடன் அவசரமாக ஒரு கூட்டம் நடத்தினர். இந்த கூட்டத்தின்போது எண்ணெய் விலை குறைக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால் எதிர்த்து பேச எண்ணெய் நிறுவனங்களிடம் எந்த பெரிய காரணிகளும் இல்லை. இதையடுத்து அவர்களும் விலையை குறைக்க முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக சோயாபீன்ஸ் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் விலை லிட்டருக்கு 5 முதல் 15 ரூபாய் வரை குறைய இருக்கிறது. இதனை உடனடியாக அமல்படுத்த அரசாங்கம் கோரினாலும், படிப்படியாகத்தான் விலையை குறைக்கப்போவதாக நிறுவனங்கள் முரண்டுபிடித்து வருகின்றன. சமையல் எண்ணெய் விலை குறையும் என்ற தகவல் இல்லத்தரசிகள் வயிற்றில் பாலை வார்த்துள்ளது.