இன்னும் விலை அதிகரிக்கும்!!! பொறு மனமே!!
இந்தியாவில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. அதில் சில பொருட்களுக்கு சுங்க வரி உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றல்ல இரண்டல்ல, 35 பொருட்களின் விலை உயரும் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தனியார் ஜெட், ஹெலிகாப்டர்கள்,உயர்தர மின்சாதன பொருட்கள்,பிளாஸ்டிக் பொருட்கள்,ஆபரணங்கள் மற்றும் உயர் ரக காகிதங்களின் விலை உயரலாம் என்று கருதப்படுகிறது. வெளிநாட்டு பொருட்களின் இறக்குமதியை குறைத்து, உள்ளூர் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஏற்பாடுகளை மத்திய அரசு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து மற்ற பொருட்களை ஆடம்பர பொருட்கள் என்று வகைப்படுத்தவும், அதற்கு தேவையான பணிகளை செய்யும்படியும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதமே அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறையானது உள்நாட்டு உற்பத்தியில் 4.4% ஆக உள்ளது. இது கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகும்.உலகளவில் சில பொருட்களின் விலை கடந்த மாதம் குறைந்துள்ளது தற்போதுள்ள நடப்புக்கணக்கு பற்றாக்குறையை சரி செய்ய உதவும் என்று கூறும் பொருளாதார நிபுணர்கள், ஆனால் திட்டம் வகுப்போர் சரியாக வகுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அடுத்த நிதியாண்டில் நடப்புக்கணக்கு பற்றாக்குறை 3.2 முதல் 3.4%ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு துவங்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்தும் வகையில் டெல்லியில் சில ஆடம்பர பொருட்களின் சுங்க வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் ஆடம்பர நகைகள், குடை, இயர்போன்களின் விலை கடந்த பட்ஜெட்டிலேயே அதிகரிக்கப்பட்டது. வெளிநாட்டுப் பொருட்களை படிப்படியாக குறைக்கும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது, இதற்கு சிறந்த உதாரணமாக பொம்மைகளை சொல்லலாம், வெளிநாட்டு பொம்மைகளுக்கு சுங்க வரி அதிகரித்ததை அடுத்து 70% வெளிநாட்டு பொம்மைகள் வரத்து குறைந்துள்ளது. இதன் விளைவாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொம்மைகளின் அளவு 240% உயர்ந்துள்ளது. அதாவது 2014-ம் ஆண்டில் பொம்மைகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட அளவு 797 கோடி ரூபாயாக இருந்தது. இதுவே 2021-2022-ல் ஏற்றுமதி மதிப்பு ரூ.2,706 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.