பிரச்னை முடியல… இனிமேல் தான் இருக்கு!!!
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் கடந்த வெள்ளிக்கிழமை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சமீபத்திய புள்ளி விவரங்கள் உலகளவில் அதிர்ச்சியை அளிக்கும் வகையில் உள்ளதாக கூறியுள்ளார். அதாவது இந்தியா சந்திக்க வேண்டிய சவால்களாக விலைவாசி உயர்வு, பண மதிப்பு சரிவு உள்ளிட்டவை இருப்பதாக தெரிவித்தார். உலகளவில் பொருளாதார சரிவு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில் இந்தியா ஓரளவுக்கு சமாளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாடுகள் கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து வெளியே வந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், பல நாடுகள் பிரச்னைகளை சந்தித்து வரும் சூழலில் சில நாடுகள் கடன்களின் மீதான வட்டி விகிதத்தை குறைக்க திட்டமிட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளார். உலகளவில் பொருளாதார மந்தநிலை மெதுவான வேகத்தில் நடந்து வருவதாக கூறியுள்ள சக்தி காந்ததாஸ் இந்திய பொருளாதாரம் ஓரளவுக்கு நிலைத்தன்மையுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். வங்கிகளும்,தனியார் நிறுவனங்களும் முன்பு இருந்ததைவிட சற்று வலுவடைந்துள்ளதாகவும் தாஸ் தெரிவித்தார். 1990-ல் இருந்து இந்திய நிதி சந்தைகள் வலுவாக உள்ளதாக கூறிய அவர்,கடந்த 10 ஆண்டுகளில் நிலையான வளர்ச்சியை பெற்றதாக கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்யும் நடவடிக்கைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளார். இன்னும் இந்தியா சந்திக்க வேண்டிய சவால்கள் அதிகம் இருப்பதாக கூறியுள்ள சக்தி காந்ததாஸ் ,உலகளவில் நிகழும் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.