சர்வம் அம்பானி மயம்..,
ஒரு காலத்தில் வெறும் கச்சா எண்ணெய் மற்றும் பாலியஸ்டர் மட்டும் விற்றுவந்த முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது புதிதாக வைசர் (wyzr)என்று புதிய வீட்டு உபயோக மின்சார பொருட்களின் உற்பத்தியையும் தொடங்கியிருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த 22 ஆம் தேதி இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஏற்கனவே ஜியோ என்ற சிம்கார்ட் நிறுவனம் இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதே முகேஷ் அம்பானி அடுத்தடுத்த பல வணிக பிரிவுகளை ஆரம்பித்தார். குறிப்பாக ஜியோ மார்ட், ரிலையன்ஸ் ரீட்டெயில், ஜியோ செல்போன் , ஊடகங்கள் என ஆக்டோபஸ் போல பல கரங்களை முகேஷ் அம்பானி ஒரே நேரத்தில் நிர்வகித்து வருகிறார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் புதிய டிவி, வாஷிங் மிஷின்,ஏசி, கீசர் உள்ளிட்டவையும் விரைவில் சந்தைக்கு வர இருக்கிறது. மின்வணிகம், நிதி நிறுவனம் ஆகியவற்றிலும் கொடிகட்டி பறக்கும் ரிலையன்ஸ் நிறுவனம் விரைவில் பரஸ்பர நிதி மற்றும் ரிலையன்ஸ் புரோக்கரேஜ் ஆகியவற்றை அளிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. ரிலையன்ஸ் ரீட்டெயில் நிறுவனத்தில் இதுவரை 18,774 கடைகள் இந்தியா முழுக்க உள்ளன. கிராமங்கள், நகரங்கள் என 30 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது. வைசர் என்ற புதிய தனது மின்சாதன பொருட்களை ஃபிளிப்கார்ட்,அமேசான் உள்ளிட்ட தளங்களில் விற்கவும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. குளிர்பாணங்களையும், உள்ளாடைகளையும் ஏற்கனவே அம்பானி குடும்பம் தங்கள் வசம் வைத்திருக்கின்றனர். இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இந்தியாவில் மின்சாதன பொருட்களை முகேஷ் அம்பானி உற்பத்தி செய்து வருகிறார். இந்தியாவில் டிக்சன் டெக்னாலஜிஸ் மற்றும் ஓனிடாவின் தாய் நிறுவனமான மிர்க் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் கைகோர்த்துள்ளது. சிம்கார்டு சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய முகேஷ் அம்பானி அடுத்ததாக உலகளாவிய நிறுவனங்களான சாம்சங்குடன் போட்டி போடத் தயாராகிவிட்டார் என்பதே உண்மை. காலையில் தூங்கி எழுந்தது முதல் இரவு படுத்து தூங்கும் வரை கிட்டத் தட்ட அனைத்து பொருட்களின் சந்தைகளிலும் ரிலையன்ஸ் நிறுவனம் கால்பதித்துவிட்டது என்றால் அது மிகையல்ல.