பங்காளிக்கு வந்த பங்கமான சூழ்நிலை….
பொருளாதார சிக்கலில் சிக்கித்தவிக்கும் பாகிஸ்தானில் போதிய வெளிநாட்டுப்பணம் கையிருப்பு இல்லாமல் அரசாங்கம் தடுமாறி வருகிறது. இந்த சூழலில் அந்தநாட்டுக்கு அளிக்கப்பட்டு வரும் சமையல் மற்றும் ஆற்றலுக்கு பயன்படும் எரிவாயுவின் அளவு குறைந்துள்ளது. Sui Southern Gas Company என்ற நிறுவனம்தான் அந்த நாட்டில் சில இடங்களுக்கு எரிவாயுவை விநியோகித்து வருகிறது. அந்த நிறுவனத்துக்கு கிடைக்கும் எரிவாயுவின் அளவு குறைந்துவிட்டதால் கராச்சியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு எரிவாயு அளிப்பது நின்றுள்ளது. எப்போதும் பரபரப்பாக இயங்கி வரும் கராச்சி நகரில் திடீரென எரிவாயு விநியோகம் நின்று போவதால் அந்நாட்டு ஏற்றுமதிகள் மிகவும் பாதிக்கப்படும் என்று தொழிற்சாலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளுக்கும் இனி 24 மணி நேரமும் கேஸ் இணைப்பு கிடைப்பதும் சாத்தியம் இல்லை என்றும் அந்த நாட்டு பெட்ரோலிய அமைச்சர் Musadik Malik தெரிவித்துள்ளார். பணம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு விலையில் சமையல் எரிவாயுவும், ஏழைகளுக்கு ஒரு விலையிலும் சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தானின் வருவாய் ஆதாரமாக திகழும் கராச்சி நகரம் மட்டுமே ஒட்டுமொத்த வருவாயில் 68விழுக்காடு பங்களிப்பையும், 54விழுக்காடு ஏற்றுமதி பங்களிப்பையும் செய்துவரும் நிலையில், திடீரென எரிவாயு விநியோகம் தடைபடுவதால் அந்நாட்டு பொருளாதாரம் மேலும் சிக்கலை சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு விரைந்து செயல்படவேண்டும் என்று வணிகர்கள் மற்றும் தொழில்துறையினர் அந்நாட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.