தற்போதைய நிலையே தொடருமாம்..
பணவீக்கம் நாடுகளை பாடாய் படுத்தும் நிலையில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் தனது முடிவுகளை மாற்ற தயாராகி வருகிறது. இந்த சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி தனது கடன் விகிதங்களை 4 ஆவது முறையாக மாற்றாமல் அப்படியே தொடர இருப்பதாக தகவல் கசிந்திருக்கிறது.கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி உயர்த்தப்பட்ட அதிகபட்ச ரெபோ வட்டி விகிதமான 6.5%அப்படியே தொடர்ந்து வருகிறது. அதன்பிறகு கச்சா எண்ணெய் விலை உயர்வு,சர்வதேச பொருட்களின் விலை அதிகரிப்பு உள்ளிட்டவை வந்த போதும் இந்திய சந்தைகள் தாக்குபிடித்து வருகின்றன. இந்த நிலையில் அக்டோபர் 4முதல் 6ஆம் தேதி வரை மத்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்கூட்டம் நடத்தப்படும் என்று ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 3ஆவது காலாண்டிலும் இந்திய சந்தைகள் வலுவாக உள்ளநிலையில் பணவீக்கம் 5விழுக்காடாகவே இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது கடந்த மாதம் வாடிக்கையாளர் விலை குறியீட்டு அடிப்படையிலான சில்லறை பணவீக்கம் என்பது முன்பு இருந்த மாதத்தில் இருந்து அதாவது 7.44-ல் இருந்து தற்போது 6.83விழுக்காடாக சரிந்துள்ளது.பரவலாக பெய்யும் மழை இல்லாமல் சில இடங்களில் வறட்சி,சில இடங்களில் அதீத மழை என பல பாதிப்புகளை இந்திய பொருளாதாரம் சந்தித்து வருகிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த மேலும் வட்டி விகிதத்தினை உயர்த்தாமல் இதே நிலையில் அக்டோபரில் நிதி கொள்கை தொடர வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.நிதி கொள்கைக்கூட்டம் வரும் 4 முதல் 6ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.