ஜான்சன் பேபி பவுடர் நிறுவனத்துக்கு வந்த சோதனை..
பால்போன்ற தேகம் படைத்த குழந்தைகளுக்கு உலகின் பலநாடுகளிலும் அம்மாக்கள் எல்லா பொருட்களையும் பார்த்து பார்த்து அனைத்தையும் வழங்குவர். ஆனால் குழந்தைகளின் உடலுக்கு ஏற்றதாக பல ஆண்டுகளாக விளம்பரப்படுத்தப்படும் பொருள் என்றால் அது ஜான்சன்ஸ் பேபி பவுடர்தான். இந்த பேபி பவுடர் மற்றும் அதன் துணை நிறுவனமான LTL நிறுவனம் மீது எக்கச்சக்கமான புகார்கள் வந்துள்ளன. அதிலும் குறிப்பாக சிலருக்கு ஜான்சன்ஸ் பவுடர் போட்டால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் புகார்கள் எழுந்தது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் அடுத்தடுத்து சரமாரியாக லட்சக்கணக்கில் வழக்குகளை தொடுத்துள்ளனர்.
இதனிடையே ஜான்சன்ஸ் பேபி பவுடர் நிறுவனத்தின் விற்பனை 24.7 பில்லியன் டாலராகவும், எல்டிஎல் நிறுவனத்தின் நஷ்டம் 68 மில்லியன் டாலர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கணக்கில் காட்டியுள்ள எல்டிஎல் நிறுவனம் ஏற்கனவே புகார் தெரிவித்த வாடிக்கையாளர்களுக்கு நஷ்ட ஈடாக 8.9 பில்லியன் அமெரிக்க டாலர் அளித்துள்ளதாக கூறியுள்ளதுடன், திவாலாகும் நிலையில் இருப்பதாகவும் அறிவித்துள்ளது. இந்த சூழலில் தங்கள் நிறுவனத்தின் மீது புதிதாக யாரும் வழக்கு தொடர்ந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என்றும் எல்டிஎல் நிறுவனமும் ஜான்சன்ஸ் பேபி பவுடரை தயாரிக்கும் நிறுவனமும் இணைந்து கூட்டாக நீதிமன்றத்தை நாடி கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் கிடைக்கும் வருவாய்க்கும், ஏற்பட்டுள்ள இழப்புக்கும் தொடர்பே இல்லாமல் அதிக வருவாய் வருவதால் திவாலான நிறுவனமாக அறிவிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். பவுடர் பூசினால் புற்றுநோய் வருவதாக எழுந்த புகாரை அடுத்து நீதிமன்ற படிகளை ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனம் ஏறி வருவது உலகளவில் பெரிய பரபரப்பான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.