அமைதியாக கொல்லும் வேலைஇழப்பு நச்சு…
உலகளவில் டெக் துறையில் சத்தமின்றி ஆட்குறைப்பு நடவடிக்கை நடந்து வருகிறது. கடந்த 2022-ல் மிகப்பெரிய நிறுவனங்களான அமேசான், ஆலஃபபெட், மைக்ரோசாஃப்ட், மெட்டா ஆகிய நிறுவனங்கள் வெளிப்படையாகவே ஆட்களை வீட்டுக்கு அனுப்பினர். கடந்தாண்டும் இதே போக்கு காணப்பட்டது. குறிப்பாக கடந்தாண்டு மட்டும் டெக் துறையில் 2லட்சத்து 69,915 பேருக்கு வேலை போனது. பொருளாதார மந்த நிலை, பெருந்தொற்று நேரத்தில் அளவுக்கு அதிகமான டெக் பணியாளர்கள் எடுக்கப்பட்டதை குறைக்கும் நிலை ஆகிய காரணிகளால் கடந்த 2 ஆண்டுகளாக வேலையில் இருந்து ஆட்களை வீட்டுக்கு அனுப்பும் நிலை அதகரித்துள்ளது. இதே நிலை 2024-லும் தொடர்கிறது. இந்தாண்டில் மட்டும் 98ஆயிரத்து 834 பேர் தங்கள் பணிகளை இழந்திருக்கின்றனர். நிர்வாக செலவுகளை குறைக்கும் நோக்கில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் பெரிய டெக் நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. இது ஒரு பக்கம் நடக்கையில், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகளில் சத்தமின்றி ஆட்களை குறைக்கும் போக்கு அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் 20 ஆயிரம் பேர் கடந்தாண்டு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்றும் டெக் பணியாளர்கள் சங்கங்கள் தெரிவிக்கின்றன. சத்தமின்றி நடக்கும் ஆட்குறைப்பில் கொடுமையான விஷயம் என்னவெனில் 30 நாட்களுக்குள் புதிய வேலையை தேட வேண்டும், அப்படி இல்லையெனில் குடும்பம் நிற்கதியாக நிற்கும். இந்தாண்டின் முதல் 5 மாதங்களில் மட்டும் அமைதியான ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மூலம் 3 ஆயிரம் பணியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக பணிச்சுமை அளிப்பதால் ஊழியர்களே ராஜினாமா செய்துவிட்டு செல்லும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். பணி பாதுகாப்பு இல்லாததால் டெக் பணியாளர்கள் ஒரு வித மன அழுத்தத்திலேயே இருக்கின்றனர். அதிக ஆண்டுகள் அனுபவம் உள்ள அதிகம் சம்பளம் வாங்கும் ஊழியர்கள்தான் இதில் முதலில் பாதிக்கப்படுகின்றனர். இந்த பிரச்சனைகளுக்கு எப்படி தீர்வு காண்பது என்பதே புரியாமல் நிறுவனங்களும் டெக் பணியாளர்களும் காலத்தை கழித்து வருகின்றனர். அரசாங்கம் இதற்கு தீர்வு காணுமா என்றும் பணியாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சவாலான தருணங்களில் பணியாளர்களுக்கு உதவி தேவை என்பதே டெக் பணியாளர்களின் மனக்குமுறலாக இருக்கிறது.