வட்டியை ஏற்றிய அமெரிக்க பெடரல் ரிசர்வ்
இந்தியாவில் ஏதோ ஒரு ஓரம் இருக்கும் நபர் வரை அனைவரையும் பாதிக்கும் அம்சமாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் எடுக்கும் முடிவு அமைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஏன் இதை கூறுகிறோம் என்றால் அமெரிக்காவில் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது. மேலும் அடுத்தடுத்து 3 வங்கிகள் திவாலாகிவிட்டன. இவை தவிர்த்து கூடுதலாக விலைவாசி ஒரு பக்கம் அமெரிக்கர்களை வாட்டி வதைக்கிறது. விலைவாசியை கட்டுப்படுத்த அமெரிக்கா வசம் இருக்கும் ஒரே ஆயுதம் கடன்களின் மீதான வட்டி விகித்ததை உயர்த்துவதுதான். இது நல்ல பலனையும் தந்ததால் பெடரல் ரிசர்வ் கடந்தசில மாதங்களாக பெரிய அளவில் மாற்றத்தை செய்யவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவில் பெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம் புதன்கிழமை நடந்தது.இந்த கூட்டத்தில் வங்கிகளில் கடன்களுக்கான வட்டி விகிதம் 0.25 % உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
இதனை அந்த அமைப்பின் தலைவர் ஜெரோம் பாவெல் குறிப்பிட்டு பேசியுள்ளார். தற்போது விலைவாசியை கட்டுப்படுத்துவது மட்டும்தான் ஒரே குறிக்கோள் என்று கூறியுள்ள அவர், தேவைப்பட்டால் மேலும் கடன்களுக்கான வட்டிவிகிதத்தை உயர்த்துவோம் என்றும் கூறியுள்ளார். இவரின் அறிவிப்பால் அமெரிக்காவில் கடன்களுக்கான வட்டி விகிதம் 5.0%-ல் இருந்து 5.25 %ஆக உயர்ந்திருக்கிறது. முதலில் இந்த அறிவிப்பால் அமெரிக்க பங்குச்சந்தைகள் எழுச்சி கண்டாலும் பின்னர் படிப்படியாக சரிவை நோக்கி சென்றன. இனி வரும் காலகட்டங்களில் வட்டியை உயர்த்துவது குறித்து அந்தந்த நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் பாவெல் கூறியுள்ளார். உலகளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த பெடரல் ரிசர்வ் வங்கியின் கடன் விகிதம் ஏற்றம் இந்தியாவிலும் பிரதிபலிக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.