ரூபாயின் மதிப்பு கடும் சரிவு!!!
அமெரிக்காவில் நிலவும்மோசமான பொருளாதாரம் காரணமாக இந்தியாவிலும் நிதி நிலைமை சிக்கலாகியுள்ளது. பல்வேறு நடவடிக்கைகளால் அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடைந்துள்ளது. அதே நேரம் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. வியாழக்கிழமை தரவுகளின்படி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 டாலருக்கு இந்திய ரூபாயில் 83 ரூபாய் 14 பைசா தரவேண்டும்.இது வெள்ளிக்கிழமை சற்று சீரடைந்து 83 ரூபாய் 0850 பைசாவாக இருந்தது.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு முதலீடுகளும், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கு அதிகரிக்கும் முதலீடுகளும் அதிகபட்ச அளவை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வருங்காலங்களில் இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரியவே அதிக வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்கள் மீதான வட்டி விகிதத்தை உயர்த்துமா என்பது பலருக்கும் தெரியாது என்றும்,இந்திய ரூபாயை வலுவாக்க பெரிய காரணங்கள் இல்லை என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தியாவில் சில்லறை பணவீக்கம் அளவு ஜூலையில் 7.44விழுக்காடாக இருக்கிறது. இது ரிசர்வ் வங்கியின் தாங்கும் சக்தி அளவான 6 விழுக்காடுக்கும் அதிகமாகும். டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவதாலும் இந்திய பணவீக்கம் அதிகரிக்கிறது என்கிறார்கள் விஷயம் அறிந்த வல்லுநர்கள். அமெரிக்க டாலர் வலுவடைந்து இந்திய ரூபாய் மதிப்பு குறைவதால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு படிக்க செல்வது இன்னும் கூட செலவை அதிகப்படுத்தும்.
இந்தியாவில் நிலவும் நடப்புகணக்கு பற்றாக்குறை அதிகரிப்பே பண மதிப்பு குறைய முக்கிய காரணமாக கூறப்படுகிறது. வெளிநாட்டு பண கையிருப்பு குறைவதும் இந்திய ரூபாய் மதிப்பு சரிய மிக முக்கிய காரணியாகும். வரும் டிசம்பர் வரை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 82 முதல் 83 ரூபாயாகவே இருக்கும் என்றும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரூபாயின் மதிப்பு 79 ரூபாய் வரை உயர வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.