அடுத்தவாரம் முக்கியமான பஞ்சாயத்து இருக்கு…
இந்தவாரத்துல எந்த நிறுவனமும் திவாலாகிடக்கூடாதுடா சாமி என்று முதலீட்டாளர்கள் புலம்பும் அளவுக்கு நிலைமை மாறிவிட்டது என்றே சொல்லலாம், அந்தளவுக்கு அடுத்தடுத்த பெரிய நிறுவனங்களே ஆட்டம் கண்டுவருகின்றனர்.இந்த வகையில்தான் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு எதிராக Aircraft lessor Aircastle (Ireland) Ltd கொடுத்த திவால்நோட்டீஸ் அடுத்தவாரம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வருகிறது. வாடியா குழுமத்தின் கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் திவால் நோட்டீஸ் விசாரணைக்கு வரும் அதே சூழலில் ஸ்பைஸ்ஜெட் மீதான புகார்களும் விசாரிக்கப்பட இருக்கிறது. இந்த புதிய மனு கடந்த 28ம் தேதி தீர்ப்பாயத்தில் அளிக்கப்பட்டது.வரும் திங்கட்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கு நடப்பதால் ஸ்பைஸ் ஜெட் நிறுவன செயல்பாடுகள் எந்த வகையிலும் பாதிக்காது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது வெள்ளிக்கிழமை நிலவரப்படி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2 விழுக்காடு அளவுக்கு சரிந்தது.. ஸ்பைஸ் ஜெட் மீது இன்னும் இரண்டு வழக்குகள் NCLTயில் நிலுவையில் உள்ளன.நிதிக்கு நிகரான பங்குகளை அளிப்பதாக இரண்டு நிறுவனங்களுக்கும் ஸ்பைஸ்ஜெட் அளித்த வாக்குறுதி குறித்து இந்த இரண்டு வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இதனிடையே கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் தாக்கல் செய்த திவால் நோட்டீஸ் குறித்து கடந்த வியாழக்கிழமை 4 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விசாரணையின் முடிவில் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற தீர்ப்பை NCLT நிறுத்தி வைத்துள்ளது. விமான நிறுவனங்கள் அடுத்தடுத்து திவாலாகி வருவது முதலீட்டாளர்களை நம்பிக்கை இழக்கச் செய்து வருகிறது.