வடிவேலு பாணியில் எண்டே கிடையாது !!!
ஜூலை 19ஆம் தேதி இந்திய பங்குச்சந்தைகளில் பெரிய ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 302 புள்ளிகள் அதிகரித்து 67 ஆயிரத்து 97 புள்ளிகளாக வர்த்தகத்தை நிறைவு செய்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 83 புள்ளிகள் அதிகரித்து 19ஆயிரத்து 833 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுற்றது.
துவக்கத்தில் அட்டகாசமாக உயர்ந்த இந்திய சந்தைகள் பின்னர் சரிந்தன. கடைசி நேரத்தில் முதலீடுகள் குவிந்ததால் பங்குச்சந்தைகளில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. NTPC, Bajaj Finance, IndusInd Bank, UltraTech Cement ஆகிய நிறுவனங்கள் பெரிய லாபத்தை பதிவு செய்தன.Hindalco Industries, Bajaj Auto, Hero MotoCorp, TCS ஆகிய நிறுவனங்கள் சரிவை கண்டன. பொதுத்துறை வங்கி நிறுவன பங்குகள் 2 விழுக்காடு அதிகரித்துள்ளன. ஆற்றல்துறை சுகாதாரத்துறை, எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன பங்குகள் அரை விழுக்காடு உயர்ந்தன. பங்குச்சந்தைகளைப்போலவே சென்னையில் ஆபரணத்தங்கம் விலையும் கடுமையாக உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் 40 ரூபாய் அதிகரித்து 5590 ரூபாயாக விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் 44 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையானது. இது முன்தின விலையைவிட 320 ரூபாய் அதிகமாகும். வெள்ளி விலை கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து 82 ரூபாயாக உள்ளது. கட்டி வெள்ளி விலை கிலோவுக்கு 600 ரூபாய் அதிகரித்து 82 ஆயிரம் ரூபாயாக உள்ளது. இந்த விலைகளுடன் 3 விழுக்காடு கட்டாய ஜிஎஸ்டி இருக்கிறது. மேலும் செய்கூலி சேதாரம் சேர்க்க வேண்டும் ஆனால் அது கடைக்கு கடை மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.